பாரீஸ்: பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக நடக்கும் கலவரம் 4வது நாளை எட்டி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ள நிலையில், 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, கலவரம் நடக்கும் நிலையில் , விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் மேக்ரானுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு உட்பட்ட நான்டர்ரே புறநகரில் நஹேல்(17) என்ற சிறுவன் கீழ்படியவில்லை என்பதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சிறுவன் உயிரிழந்தான். இச்சம்பவம் மக்கள் இடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு போராட்டமும் நடந்தது.
இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் எண்ணற்ற கடைகள், கார்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், கலவரம் 4வது நாளாக நீடித்து வருகிறது.
ஸ்டராஸ்போர்க் என்ற நகரில் செயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் கடைக்குள் உள்ளே புகுந்த வன்முறையாளர்கள், அடித்து நொறுக்கினர். இதனையடுத்து அவர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
மெர்சிலி என்ற இடத்தில் போலீசாரின் தடுப்புகளை மீறி வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள், கடைகளை தீ வைத்ததுடன் அங்கிருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர்.
துப்பாக்கி கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆயுதங்களை அள்ளிச்சென்றனர். இது தொடர்பாக 90 பேரை போலீசார் பறிமுதல் செய்தனர். மற்றொரு இடத்தில் வன்முறையாளர்கள் தாக்கியதில் போலீசார் காயமடைந்தனர்.
லியோன் என்ற இடத்தில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட வன்முறையாளர்கள், அவர்கள் மீது கற்களை வீசி தாக்கினர். அந்த நகரில் உள்ள கடைகளுக்குள் கொள்ளையடிக்க முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே கலவரத்தை கட்டுப்படுத்த 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நாடு முழுவதும் குவிக்கப்பட்டு உள்ளனர். இலகுரக ஆயுதங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் பங்கேற்க வெளிநாடு சென்றிருந்த அதிபர் இமானுவேல் மேக்ரான், அவசரமாக நாடு திரும்பி கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கலவரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, கலவரம் நீடிக்கும் சூழ்நிலையில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் மேக்ரான் கலந்து கொண்டுள்ளார். இதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த செயல் முற்றிலும் பொறுப்பற்றதனமானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சமூக வலைதளங்களிலும் பயனாளர்கள், அதிபர் மேக்ரானை வசைபாடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்