சென்னை: மாரி செல்வராஜ் உதவி இயக்குநர்களை அடித்ததாக அவரே பேட்டியில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பல இயக்குநர்கள் ரகசியமாக தங்கள் உதவி இயக்குநர்களை பல விதமாக சித்ரவதை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தை இயக்க உள்ள இயக்குநர் வெங்கட் பிரபு தனது உதவி இயக்குநர்களை வீட்டுக்கே போகக் கூடாது என ஒரு ஹோட்டல் ரூமிலேயே அடைத்து வைத்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.
ஏற்கனவே தளபதி 68 பற்றிய சில தகவல்கள் கசிந்த நிலையில், இப்படியொரு ஏற்பாட்டை அவர் செய்திருக்கிறார் என கூறுகின்றனர்.
ஜோதிகா நடிக்கிறாரா: தளபதி 68 படத்தில் ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என ஒரு தகவல் கசிந்த நிலையில், அந்த தகவல் எப்படி லீக் ஆனது என தனது உதவி இயக்குநர்களை போட்டு விளாசி எடுத்துள்ளாராம் வெங்கட் பிரபு.
கஸ்டடி படத்தில் பிரியாமணி முதலமைச்சராக நடித்தது போல ஜோதிகாவுக்கு இந்த படத்தில் சிறப்பு ரோல் ஏதாவது இருக்குமா? என்கிற சந்தேகமும் தற்போது சினிமா வட்டாரத்தில் கிளம்பி உள்ளது.
உதவி இயக்குநர்கள் ஹவுஸ் அரெஸ்ட்: சம்மர்செட் எனும் ஹோட்டலில் தான் தளபதி 68 படத்துக்கான திரைக்கதை உருவாக்கத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு இருந்து வருகிறாராம். அவருடன் 6 உதவி இயக்குநர்களும் கதை விவாதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், செல்போன் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும், வீட்டுக்கு செல்லக் கூட அனுமதி இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
சீக்ரெட் காக்கும் வெங்கட் பிரபு: தப்பித்தவறிக் கூட தளபதி 68 படத்தின் கதை பற்றியோ மற்றிய முக்கிய விஷயங்கள் குறித்தோ எந்தவொரு தகவலும் வெளியே கசிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வெங்கட் பிரபு, அவரே வீட்டுக்குச் செல்லாமல் அந்த ஹோட்டலிலேயே தனது உதவி இயக்குநர்களுடன் தங்கி வருவதாக கூறுகின்றனர்.
விஜய் படங்களின் ஷூட்டிங் காட்சிகளே லீக் ஆகி விடுமே, இப்படி கதையை மட்டும் பாதுகாத்து வைப்பது போல படப்பிடிப்பிலும் வெங்கட் பிரபு பக்கா சேஃப்டியை போடுவாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
கஸ்டடி மாதிரி வேண்டாம்: எதை வேண்டுமானாலும் வெங்கட் பிரபு செய்யட்டும். ஆனால், கஸ்டடி படம் மாதிரி மட்டும் விஜய்யை வைத்து பண்ணிட வேண்டாம் என விஜய் ரசிகர்களே சோஷியல் மீடியாவில் வெங்கட் பிரபுவை ட்ரோல் செய்து வருகின்றனர்.
மேலும், அவரது தம்பி பிரேம்ஜியை அவரால் இப்படி கன்ட்ரோல் செய்ய முடியுமா? அவர் மூலமாக வெளியே மேட்டர் லீக் ஆகிடப் போகுது என்றும் கலாய்த்து வருகின்றனர்.