புதுடில்லி, அரசியல் கட்சிகள் நன்கொடைகள் பெறுவதற்காக, தேர்தல் பத்திர விற்பனை முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. தேர்தல் பத்திரங்களின் முதல் விற்பனை, 2018, மார்ச் 1 – 10 வரை நடந்தது.
இதுவரை 26 முறை பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில் 1 சதவீத ஓட்டு வாங்கிய கட்சிகள், தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை பெற தகுதி பெறுகின்றன.
இந்த பத்திரங்களை, இந்திய குடிமகன்கள், உள்நாட்டில் பதிவு பெற்ற நிறுவனங்கள் வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதன் பின் காலாவதியாகிவிடும்.
எஸ்.பி.ஐ., எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மட்டுமே, தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய அதிகாரம் பெற்றுள்ளது.
சென்னை, பெங்களூரு, லக்னோ, சிம்லா, டேராடூன், கோல்கட்டா, குவஹாத்தி, பாட்னா, புதுடில்லி, சண்டிகர், ஸ்ரீநகர், காந்திநகர், போபால், ராய்ப்பூர், மும்பை ஆகிய இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட எஸ்.பி.ஐ., கிளைகளில் இந்த பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தேர்தல் பத்திர விற்பனையின் 27வது தவணையை ஜூலை 3ல் துவங்கி 12 வரை நடத்த மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்தாண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடக்கஉள்ளதை அடுத்து, பத்திர விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்