ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்துறைப் பிரச்சனைகளில் தலையிடுவதாக துறைசார் மேற்பார்வைக் குழு உறுதியளிப்பு

இலங்கைக்கு அதிகளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொழிற்துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஒன்றிணைந்த ஆடை உற்பத்தியாளர் ஒன்றியம் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ காமினி வலேபொட தலைமையில் 2023.06.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியதுடன், இதில் ஆடை உற்பத்தித் தொழிற்துறையில் பிரச்சினைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த ஆடைத் துறையில் உள்ள பல தொழிற்சாலைகள் தமது தொழிற்சாலைகளை மூடிவிட்டு வெளிநாடுகளில் தமது கைத்தொழில்களை ஸ்தாபித்து வருவதாகவும், தற்போது இயங்கிவரும் தொழிற்சாலைகள் மொத்த உற்பத்தியில் 25%க்கும் குறைவாகவே உற்பத்தி செய்வதாகவும் ஆடை உற்பத்தியாளர்கள் இங்கு தெரிவித்தனர். அத்துடன், மூலப்பொருளுக்கான வரிகள் மற்றும் மின்சாரக் கட்டணம் காரணமாக செலவுகள் அதிகரித்தல் காரணமாக சர்வதேச சந்தையில் அவர்களின் போட்டித்தன்மை வெகுவாகக் குறைந்துள்ளதுடன், புதிய கட்டளைகளை (orders) பெறுவதும் மிகக் கடுமையாகக் குறைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இத்துறையின் மூலம் நாட்டுக்கு சுமார் 3 1/2 இலட்சம் நேரடி வேலை வாய்ப்புகளும் 3 இலட்சம் மறைமுக வேலை வாய்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் பல பில்லியன் பெறுமதியான பெறுமதி சேர் (VAT) வரியை திருப்பி செலுத்தாததால் தாம் எதிர்கொண்டுள்ள சிரமங்கள் குறித்தும் ஆடை உற்பத்தியாளர்கள் குழுவிடம் தகவல் முன்வைத்தனர்.

மின்கட்டணம் உள்ளிட்ட உற்பத்திச் செலவு அதிகரிப்பு, புதிய வரி விதிப்பு, உலகச் சந்தை வீழ்ச்சி, புதிய கட்டளைகளை (orders) பெறுவதில் வீழ்ச்சி போன்ற அச்சுறுத்தல்களின் முன்னிலையில் SVAT முறையை அகற்றினால் ஒட்டுமொத்த ஆடைத் தொழிலும் வீழ்ச்சியடையும் வாய்ப்புகள் இருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கமைய, SVAT முறையை அகற்றுவதற்கு முன்னர், தொழில்துறையின் பாதுகாப்பிற்காக பொருத்தமான அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு முன்னிற்பதாக குழு உறுதியளித்தது. தன்னியக்க VAT மீளளிப்பு முறை நடைமுறைப்படுத்தப்படும் வரை உள்ளீட்டு வரியை நிர்வகிப்பதற்கான முறைமையின் அவசியத்தை குழு ஏற்றுக்கொண்டதுடன், இந்தப் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை பாராளுமன்றத்திற்கும் அரசாங்கத்திற்கும் விரைவில் சமர்ப்பிக்க குழு செயற்படும் என அதன் தலைவர் கௌரவ காமினி வலேபொட உறுதியளித்தார்.

அந்நியச் செலாவணியை ரூபாவாக மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பிராந்தியத்தில் தற்போதுள்ள சட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் ஏற்றுமதி வருமானத்தை உள்ளூர் நாணயமாக மாற்றுவது தொடர்பான தற்போதைய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து குழுவிடம் அறிக்கை அளிக்குமாறு குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டார்.

மேற்குறிப்பிட்ட பிரேரணையை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதை விரைவுபடுத்துவதற்காக JAFF நிறுவனத்தினால் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு எதிர்காலத்தில் வழங்கப்பட வேண்டிய ஆதரவு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அதுமட்டுமின்றி, பொதுவாக தொழில்துறையினர் மற்றும் முதலீட்டுச் சபையின் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சஹான் பிரதீப் விதான, கௌரவ டபிள்யூ. எச். எம். தர்மசேன, கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத், கௌரவ அசங்க நவரத்ன, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ சுதத் மஞ்சுள, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ கருணாதாச கொடித்துவக்கு ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.