`விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்’ என்பது உலகறிந்த உண்மை. அப்படி உலகத்திற்கே படியளக்கும் விவசாயிகள் இன்று காலநிலை மாற்றத்தாலும், போதிய மழை இன்மையாலும் அவதி பட்டு கொண்டு இருக்கிறார்கள். நிலத்தில் தான் போட்ட பணத்தை எடுக்க முடியாமல், வீட்டில் உள்ள நகையை அடகு வைத்து மீண்டும் மீண்டும் நிலத்தில் முதலீடு செய்யும் விவசாயிகளையே இன்று நாம் பார்க்கிறோம்.
தொடர்ந்து ஏற்படும் நஷ்டத்தால், தனது அடுத்த தலைமுறை விவசாயத்திற்கு வரக்கூடாது என்று நினைத்த அவர்கள், கால்வயிற்றுக் கஞ்சி குடித்து அவர்களை எப்படியாவது படிக்க வைத்து பெருநகரங்களில் வேலைக்கு அமர்த்தி விட வேண்டும் என்று நினைத்தார்கள்.. இப்படியே காலம் சென்றால் அடுத்து நாம் உண்பதற்கு நம் முன் உணவு இருக்குமா என்பது கூட கேள்விக்குறி தான். இப்படிப்பட்ட நிலைமை நமக்கு வரக்கூடாது என்று நினைத்தால் நாம் விவசாய உற்பத்தியில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இன்று நாம் பின்பற்றுகின்ற விவசாய முறை உண்மையிலே நமது பாரம்பரிய விவசாய முறையா என்று சற்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நமது பாரம்பரியத்தில் இருந்து நழுவி நமக்கே தெரியாமல் அந்நிய நாட்டு விவசாய முறைக்கும், பூச்சி மற்றும் கலைக்கொல்லி மருந்துகளுக்கும் அடிமையாகி உள்ளோம். இவற்றையெல்லாம் நாம் கவனத்தில் கொண்டு களைய முற்படும் தருணம் நாம் விதைகளை விதைக்கும் முறைகளையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
இன்று நாம் வயல் வெளிகளை ட்ராக்ட்டர் கொண்டு உழுது விதைகளை நடவு செய்கிறோம். இது தான் சிறந்த முறை என்று நாம் நம்பி கொண்டு இருக்கிறோம். உண்மையில் இதை விட சிறந்த முறைகளை நம் பழங்குடி மக்கள் பின்பற்றுகிறார்கள். இதையே தான் ஜப்பான் வேளாண் விஞ்ஞானி மசானபு ஃபுகோகா, நம் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றோர் பின்பற்றினார்கள்.
அந்த வேளாண் முறைக்குப் பெயர் தான் ‘உழவு இல்லா விவசாயம்’ உழவு இல்லா விவசாயம் என்பது நிலத்தை உழாமல் விதைகளை மண்ணில் தெளிப்பது. இதில் விதைகள் பறவைகளால் உண்ணலாம். அந்த சமயம் நாம் கூடுதலாக விதைகளை தெளிக்க வேண்டும்.. இது நமக்கு உழவு செய்வதற்கு தேவைப்படும் பணத்தை மிச்சப்படுத்தும். மண்ணின் வளத்தையும் அதிகப்படுத்தும். உழவு இல்லமால் விவசாயம் செய்யும் பொழுது நுண்ணுயிரிகள், தாவர வேர்கள் நுழைவது, மண்புழு மற்றும் சிறு விலங்குகள் நுழைவது மூலமும் தன்னை தானே உழுது கொள்ளும்.
இது குறித்து இயற்கை விவசாயி அரிச்சலூர் செல்வம் கூறுகையில், “உழவு இல்லா விவசாயம் என்பது சாத்தியமே. இதற்கு சிறந்த உதாரணமாக நாம் காட்டை எடுத்து கொள்ளலாம். காட்டை நாம் உழவில்லை, ஆனால் காட்டில் நாம் கால் வைக்க முடியாத அளவு மரங்கள் மற்றும் புற்கள் வளர்ந்து இருக்கிறது. மழை இல்லாத நேரங்களில் கூட மரங்கள் பசுமையாக இருப்பதை பார்த்து இருக்கிறோம். ஆனால் நாம் உழுது பயிர் செய்த நிலங்களில் நீர் குறிப்பிட்ட இடைவெளியில் இறைக்கா விட்டால் அங்கு பசுமை காணாமல் போய் வாடி போய் விடுகிறது. காரணம் நாம் மண்ணை உழுது கொண்டு இருக்கும் சமயம் ,மண் நீர் தன்மையை இழந்து விடுகிறது. பொதுவாக மண்ணுக்கு வெயில் நல்லது அல்ல.
அப்படிப்பட்ட நிலையில் உழுது கொண்டு விவசாயம் செய்வது மேற்பரப்பில் வெயிலில் இருந்த மண் அடியில் சென்று, அடியில் இருந்த மண் மேற்பரப்பிற்கு வருவது மண்ணின் சமநிலையை கேள்வி குறியாக்கும் செயல் தான். மேலும் உழவில்லா விவசாயம் செய்வதற்கும் நாம் நிலத்தை பண்படுத்த வேண்டும். உடனே நிலம் நம் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடாது. அவற்றை உரமேற்ற வேண்டும். அப்படி முடியாத சமயம் கொஞ்சம் கொஞ்சமாக நமது நிலத்தை தரிசாக போட்டு பண்படுத்த வேண்டும். காலநிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக Plenty for Life என்ற புத்தகத்தை குறிப்பிடலாம். நிலத்தில் மரம் இருப்பதும், மரத்திற்கு நடுவில் விதைகளை பராமரிப்பதும் உழவில்லா விவசாயம் செய்ய மேம்பட்ட வழி” என்றார்.
உழவில்லா விவசாயம் சாத்தியமா? என்பது குறித்து அரியனூர் ஜெயச்சந்திரனிடம் பேசிய போது அவர் கூறுகையில், “மசானபு ஃபுகோகா அவர்கள் சொன்னது போல் முழுமையாக உழவில்லா விவசாயம் அதாவது ‘do nothing form’ நம் நாட்டில் மேற்கொள்வது கடினம். காரணம் ஜப்பான் வருடம் முழுவதும் மழை பெய்யும் இடத்தில் உள்ள ஒரு நாடு, ஆனால் இந்தியா பருவத்திற்கு ஏற்றார் போல் மழை பெய்யும் மிக வெப்ப மண்டல நாட்டில் மசானபு ஃபுகோகா அவர்களின் முறையை அப்படியே மேற்கொள்வது இயலாத காரியம். ஆனால் நமது பாரம்பரிய ஏர்கலப்பை வைத்து மண்ணை உழும் போது அது மண்ணை தேய்ப்பது போன்ற செயல் தான்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அதை குறைந்த உழவு விவசாயம் என்றும் சொல்லலாம். ஆனால் இன்று உழவு என்ற பெயரில் அதிக எடை ஒரு உள்ள ட்ராக்டர் மற்றும் ஆழமாக உழும் கலப்பையைக் கொண்டு நிலத்தை உழும்போது எடையின் காரணமாக, மண் அதிகமான அழுத்தத்தை சந்தித்து கெட்டிப்பட்டு போகிறது. இது மாற்றம் பெற வேண்டிய செயல்முறை, அதே சமயம் இன்று நாம் முற்றிலுமாக ஒரு பயிர் வேளாண்மைக்கு மாறிவிட்டோம். இது கண்டிப்பாக நமது சிந்தனைக்கு உட்ப்படுத்தப்பட்டு பலப் பயிர் விவசாயமாக மாற்ற முயற்சி மேற்கொள்ள வேண்டும். விதிவிலக்காக நெல் சாகுபடி செய்யும் சமயம் மட்டும் நம்மால் ஒரு பயிர்விவசாயம் தான் செய்ய முடியும் என்றவர்,மசானபு ஃபுகோகாவை பின்பற்றி பல மாற்றங்கள் செய்து நம் நாட்டிற்க்கு ஏற்றவாறு அறிவியல் சிந்தனையோடு விவசாயத்தில் புரட்சி ஏற்ப்படுத்தியவர் நம்மாழ்வார். அவரை பின்தொடர்ந்தது காலநிலை மற்றும் பருவ காலத்திற்கு ஏற்றவாறு உழவில்லா அல்லது குறைந்த அளவு விவசாயம் செய்யலாம் என்கிறார். இந்த முறையை தான் இந்தியாவின் பைகாப் பழங்குடி மக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்” என்றார்.
-அ.விஷ்ணுபிரியா