காண்டம் பற்றிய விழிப்புணர்வு இன்றைக்குக் கிட்டத்தட்ட அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் யார், எதைப் பயன்படுத்த வேண்டும்; காண்டம் அலர்ஜி ஏற்பட்டால் என்ன செய்வது என்பன போன்ற முழுமையான விழிப்புணர்வு பலரிடமும் இல்லை. இதுகுறித்தே, இந்த வார காமத்துக்கு மரியாதையில் பாலியல் மருத்துவர் காமராஜ் விரிவாகப் பேசியிருக்கிறார்.
“காண்டம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை சொல்வதற்கு முன்னால், அதுபற்றி சொல்லப்படுகிற சுவாரஸ்யமான ஒரு தகவலை சொல்ல விரும்புகிறேன். இங்கிலாந்தை ஆட்சி செய்து வந்த இரண்டாம் சார்லஸ், உறவில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆனால், அந்தக் காலத்தில் சிஃபிலிஸ் (SYPHILIS) போன்ற பால்வினை நோய்கள் அதிகம் இருந்ததால், அடிக்கடி உறவு கொள்ள பயந்தார். மன்னருடைய மருத்துவர் ஆட்டுக்குடலின் நுனியைத் தைத்து ஆணுறை போல உருவாக்கி அதை மன்னருக்கு வழங்கினார். இது பால்வினை நோய்கள் வராமல் தடுக்கும் என்பதையும் கண்டறிந்தார். மன்னருடைய மருத்துவரின் பெயராலேயே, ‘காண்டம்’ என்று அது அழைக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரின்போது உலகின் சில இடங்களில் மட்டும் இருந்து வந்த சிஃபிலிஸ் என்ற நோய், உலகம் முழுக்க பெருமளவில் பரவியது. அந்த நேரத்தில் அதைத் தடுக்க காண்டம் அதிகளவில் பயன்பட்டது. இதன்பிறகு காண்டம் தயாரிக்கும் நிறுவனங்கள் அதை பல விதங்களில் தயாரிக்க ஆரம்பித்தன. அந்த வகையில் தற்போது லேட்டேக்ஸ், பாலியூரித்தின், ரப்பர், ஃப்ளேவர்டு, ஈட்டபிள், ஹனிமூன் காண்டம், முதலிரவு காண்டம், வைப்ரேட்டிங் காண்டம் என்று பலவிதங்களில் வருகின்றன.
காண்டம் பயன்படுத்துவதற்கு முன்னால் நீங்கள் கவனிக்க வேண்டியவை என்னென்னவென்றால்…
* காண்டம் சேதாரமாகி இருக்கக்கூடாது.
* அதன் காலாவதி தேதி முடிந்திருக்கக்கூடாது.
* காண்டமில் ஸ்மால், மீடியம், பிக் சைஸ் என மூன்று அளவுகள் இருக்கின்றன. அதில், உங்களுக்கு என்ன சைஸ் பொருந்துமோ அதைத்தான் பயன்படுத்த வேண்டும்.
* சிறியதாக இருந்தால் ஆணுறுப்பில் வலி ஏற்படுத்தும்; பெரியதாக இருந்தால் கழன்று வந்துவிடும். இதனால், தேவையற்ற கர்ப்பம், பால்வினை நோய்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
* ஒருமுறை அணிந்து, அதைச் சரியாக அணிய முடியவில்லை என்றாலோ அல்லது சிறிதாகக் கிழிந்துவிட்டாலோ அதைப் பயன்படுத்தவே கூடாது.
* துளையிருந்தாலும் பயன்படுத்தக்கூடாது.
* ஒருமுறை பயன்படுத்திய காண்டமை மறுமுறை பயன்படுத்தவே கூடாது.
* காண்டமை பர்ஸில் வைக்கும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. இதனால் காண்டம் சேதமாகும். விளைவு, பால்வினை நோய்கள் வரலாம். ஹெச் ஐ. வி.கூட வரலாம்.
* பால்வினை நோய்கள் வந்து விடுமோ என்கிற பயத்தில் சிலர் இரண்டு காண்டம் அணிந்து உறவில் ஈடுபடுகிறார்கள். இது அவசியமில்லாதது.
* காண்டம் உள்ளே கொஞ்சம் லூப்ரிகேஷனும், ஸ்பெர்மிசைட் என்கிற திரவமும் இருக்கும். இந்தத் திரவம் விந்தணுக்களைக் கொல்லும் தன்மை கொண்டது.
* மருத்துவப் பரிசோதனை நிலையங்களில் குழந்தையின்மை சிகிச்சைக்காக semen எடுக்கும்போது, கமர்ஷியல் காண்டமில் semen கலெக்ட் செய்யக்கூடாது. செய்தால், விந்தணுக்கள் இறந்துவிடும். பரிசோதனை முடிவும் தவறாக வரும்.
சிலருக்கு காண்டம் அலர்ஜி இருக்கலாம். எந்த மாதிரி காண்டம் அலர்ஜி ஏற்படுத்துகிறது என்பதை கவனித்து அந்த மெட்ரீயல் காண்டமை தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை அதற்குள் இருக்கிற திரவம் அலர்ஜி ஏற்படுத்துகிறது என்றால், காண்டமை தவிர்த்துவிட்டு வேறு கருத்தரிப்புத் தடைகளை முயற்சி செய்யலாம். ஆனால், இந்த இரண்டு பிரச்னைகளுமே அரிதாக வருபவைதான்.
காண்டம் அணிவதால் சில பிரச்னைகளும் வரலாம். இதை அணிவதால் விறைப்புத்தன்மை வரவில்லை என்கிற ஆண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அணிந்தால்தான் நன்றாக இருக்கிறது என்கிற ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களால் காண்டம் அணியாமல் உறவு கொள்ள முடியாது. அதனால், இவர்களுக்கு காண்டம் அடிக்ஷன் இருக்கிறது என்று சொல்ல முடியாது.
இறுதியாக, முக்கியமான ஒரு பாயின்ட்… காண்டம் பெண்ணுறுப்பில் கிழிந்து தங்கிவிட்டால் என்னவாகுமோ என்கிற பயம் கணவர்களுக்கும் இருக்கிறது, மனைவியருக்கும் இருக்கிறது. உண்மையில், அப்படிக் கிழிந்து பெண்ணுறுப்பில் தங்கிவிட்ட காண்டம் துண்டு தானாகவே வெளியே வந்துவிடும். பயப்படத் தேவையில்லை” என்கிறார் டாக்டர் காமராஜ்.