அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய வழக்கில் சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டின் ஜாமீன் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
குஜராத் கலவர வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பிரதமர்மோடி குற்றமற்றவர்” என்று 2022-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் மீது குஜராத் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
அப்போது ஜாமீன் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் முறையிட்டார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து குஜராத்தின் சபர்மதி சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இனிமேல் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில் தீஸ்தா சீதல்வாட் சார்பில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி நிர்ஜார் தேசாய் நேற்று விசாரித்து தள்ளுபடி செய்தார். மேலும், தீஸ்தா சீதல்வாட் உடனடியாக சரண் அடைய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மும்பையில் வசிக்கும் தீஸ்தா சீதல்வாட் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சரணடைவார் என்று தெரிகிறது. இல்லையெனில் அவர் கைது செய்யப்படுவார். அவர் மீதான வழக்கு விசாரணை வேகம் பெறும் என்று குஜராத் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.