திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை கூடும் வாரச்சந்தை இன்று (ஜூலை 2) நடந்தது. இந்த சந்தையில் கொடைக்கானல் நகர் பகுதி மக்கள், மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதி கிராம மக்கள் அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இதில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாகவே வரத்து குறைந்து விலை மெல்ல உயர தொடங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரைப்பகுதியில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்றது. ஆனால், இன்று கொடைக்கானலில் ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தக்காளி இல்லாமல் சமையல் இல்லை என்கிற நிலையில் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அதை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், மழையால் தமிழகம் முழுவதும் தக்காளி விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. போக்குவரத்து செலவு, ஏற்று கூலி, இறக்கு கூலி காரணமாக தரைப்பகுதியை விட மலைப்பகுதியில் விலை கூடுதலாக உள்ளது, என்றனர்.