சிதம்பரம்: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேரில் ஆஜராக சிதம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த போலி செய்தி வெளியிட்டதாக புகார் வந்த நிலையில் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
கடந்த வருடத்திற்கு முன்பு வரை சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் பெண் ஒருவரை தீட்சிதர் கனகசபை மேடைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் மற்ற தீட்சிதர்கள் அதனை தடுத்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட சர்ச்சையில் அப்பெண்ணை சாதி பெயர் சொல்லி தீட்சிதர்கள் திட்டியதாக அப்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் தனியாக பணம் வசூலிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு விசாரணை செய்தது. பின்னர், கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும் அறிவித்தது. இது குறித்து அரசாணையை கடந்த வருடம் மே மாதம் வெளியிட்டது.
ஆய்வு: இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், கோவில் நிதி மோசடி தொடர்பாக பல்வேறு புகார்கள், மனுக்கள் வந்த நிலையில் அங்கு ஆய்வு மேற்கொள்ள அறநிலையத்துறை முடிவு செய்தது. பொது கோவில்களில் புகார்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்பதால், அறநிலையத்துறை கடந்த வருடம் ஜூன் மாதம் அங்கு ஆய்வு செய்ய முடிவு எடுத்தது.
ஆனால் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளிடம் தீட்சிதர்கள், ஆவணங்களை வழங்க மறுத்தனர். கோவில் கணக்கு வழக்கு விவரங்களை வழங்க மறுத்தனர். சிதம்பரம் நடராஜர் கோவில் பொதுக்கோவில் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பொதுக்கோவில்களில் ஆய்வு நடத்த அறநிலையத்துறைக்கு உரிமை உள்ளது. புகார் வரும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959 பிரிவு 23, 28ன் படி ஆய்வு செய்ய முடியும். ஆனாலும் தீட்சிதர்கள், ஆவணங்களை வழங்க மறுத்து அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சர்ச்சை: இதையடுத்து இப்போது கனகசபை விவகாரம் மீண்டும் எழுந்துள்ள நிலையில் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்க தமிழ்நாடு அறநிலையத்துறை முயன்று வருகிறது. மீண்டும் அங்கே கனகசபையில் ஏறி வழிபாடு செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் ஏறி வழிபாடு செய்தனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேரில் ஆஜராக சிதம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த போலி செய்தி வெளியிட்டதாக புகார் வந்த நிலையில் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதன்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீட்சிதர்களை தாக்கி பூணூலை அறுத்ததாக போலி செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து, சமூக அமைதியை குலைக்கும் வகையில் செயல்பட்டதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில்தான் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு பாஜகவை அதிர வைத்து உள்ளது. இதற்கு எதிராக பாஜகவினர் 10-12 பேர் அன்று இரவே மதுரையில் போராட்டங்களை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்.
தொடர்ந்து கடுமையான போஸ்டுகளை போடுவது இவரின் வழக்கம். அதே சமயம் இவர் சில நேரங்களில் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை வைப்பது, வதந்திகளை பரப்புவதை வழக்கமாக வைத்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
முக்கியமாக திமுகவிற்கு எதிராக இவர் தொடர்ச்சியாக வதந்திகளை பரப்புவதாக திமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அந்த வகையில் இவர் ஆதாரம் இல்லாமல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட போஸ்ட் ஒன்று பெரிய சர்ச்சையானது.
மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அதில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்.
எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்! ஆளும் பாஜக அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்போது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா அல்லது பம்மி விட்டீர்களா? பிரிவினை வாதம் பேசி சிவப்பு கொடியை போர்த்தி கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே” என சு.வெங்கடேசனை கடுமையாக தாக்கி போஸ்ட் செய்து இருந்தார் எஸ்.ஜி.சூர்யா.
இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த எஸ்.ஜி.சூர்யா மீது சிபிஐஎம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படியில்தான் சூர்யா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.