டிவி நடிகரின் உயிரை காப்பாற்றிய மம்முட்டி
நடிகர் மம்முட்டி திருவனந்தபுரத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றின் பங்குதாரர்களில் ஒருவராகவும் இருப்பதுடன் மிகப்பெரிய மருந்து நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதன்மூலம் பலருக்கு இலவச மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார். அப்படி சமீபத்தில் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மலையாள டிவி நடிகரான கொல்லம் ஷா என்பவருக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார் மம்முட்டி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பில் டிவி நடிகர் கொல்லம் ஷா நடித்து வந்த போது மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்தபோது இதயத்தில் நான்கு அடைப்புகள் இருப்பதாகவும் உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறினர். அதற்கு மிகப்பெரிய தொகை செலவாகும் என்கிற நிலையில், அவரது சக நடிகரான மனோஜ் என்பவர் கொல்லம் ஷா பாதிக்கப்பட்ட நிலை குறித்து மம்முட்டிக்கு உருக்கமாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி அனுப்பினார்.
இதை தொடர்ந்து சில நாட்களிலேயே திருவனந்தபுரத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றில் கொல்லம் ஷாவுக்கு இலவச இதய அறுவை சிகிச்சைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டதாக கூறி அவரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார் மம்முட்டி.. தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து கொல்லம் ஷா நலமாக இருக்கிறார்.