நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 20-ல் தொடங்கும்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மிக பிரம் மாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மே மாதம் 28-ம் தேதி தொடங்கி வைத்தார். மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு நடைபெற்றால், எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப அதிக எண்ணிக்கையில் இருக்கைகளுடன் நாடாளுமன்ற கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அறிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2023, ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும். இந்தக் கூட்டத் தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறும்போது, ‘‘மழைக்கால கூட்டத் தொடர், பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே முதலில் தொடங்கும். சில அமர்வுகளுக்குப் பிறகு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத் தொடர் தொடரும். அப்படி நடைபெற்றால், புதிய கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் கூட்டத் தொடராக அது அமையும். இந்த கூட்டத் தொடரில் சுமார் 17 அமர்வுகள் இருக்கும்’’ என்று தெரிவித்தனர்.

மழைக்கால கூட்டத் தொடரின் போது முக்கியமாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், பணி நியமனம், பணி மாற்றம் போன்ற விவகாரங்களில் தலைநகர் டெல்லி நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் மத்தியில்..: டெல்லியில் கொண்டு வரப்பட்ட இந்த அவசர சட்டத்தை எதிர்த்து ஆம் ஆத்மி அரசுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

எனினும், பொது சிவில் சட்டத்தை கொள்கை ரீதியாக ஆதரிக்கிறோம் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் மத்தியில் முழு ஒற்றுமை இல்லாத நிலையே உள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மழைக்கால கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மத்தியில் பாஜக தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பாக பொது சிவில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டால், அதை கடுமையாக எதிர்க்க பல்வேறு தலைவர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.