▪️ ஜூலை 04 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு இடம்பெறாது
▪️ ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் ஜூலை 05 ஆம் திகதி
▪️ ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இரண்டாவது நாளாகவும் ஜூலை 06 ஆம் திகதி
பாராளுமன்றம் எதிர்வரும் 05 ஆம் திகதி புதன்கிழமை முதல் 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023.06.30 ஆம் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெறாது என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
ஜூலை 05 ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 09.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் 10.30 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப. 10.30 மணிக்கு பல்வேறு நியதிச்சட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தொடர்பான எட்டு (08) பிரேரணைகள் விவாதமின்றி நிறைவேற்றப்படவுள்ளன.
அதனையடுத்து, மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 05.30 மணி வரை அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய ‘நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள்’ தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.
ஜூலை 06 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 05.00 மணி வரை ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, பி.ப. 05.00 மணி முதல் 05.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 09.30 மணி முதல் 10.30 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 05.00 மணி வரை வானூர்தி மூலம் ஏற்றிச்செல்லல் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அதனையடுத்து, பி.ப. 05.00 மணி முதல் பி.ப. 05.30 மணி வரை எதிரிக்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.