மும்பை: “மகாராஷ்டிராவில் இரட்டை இன்ஜின் ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் நடந்துவரும் நிலையில் அஜித் பவார் வருகையால் இந்த ஆட்சிக்கு மூன்றாவது இன்ஜின் கிடைத்துள்ளது” என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக அஜித் பவார் இன்று (ஜூலை 2) பதவியேற்றுக் கொண்டார். மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக அமைந்த இந்த நிகழ்வில் அஜித் பவாருடன் அவரது ஆதரவாளர்கள் 8 பேரும் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் இது குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “மகாராஷ்டிராவில் இரட்டை இன்ஜின் ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் நடந்துவரும் நிலையில் அஜித் பவார் வருகையால் இந்த ஆட்சிக்கு மூன்றாவது இன்ஜின் கிடைத்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக இந்த ஆட்சியில் இணைந்த அஜித் பவார் மற்றும் பிற தலைவர்களையும் வரவேற்கிறோம். தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் அனுபவம் மாநிலத்தை மேலும் வலிமையாக்க உதவும்” என்றார்.
அமைச்சரவையில் பங்கீடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஷிண்டே, “இது குறித்து முடிவு செய்ய அவகாசம் இருக்கிறது. எதிர்க்கட்சி கடந்த மக்களவைத் தேர்தலிலாவது நான்கைந்து இடங்களைக் கைப்பற்றியது. இந்த முறை அதற்கும் வாய்ப்பில்லை” என்று கூறினார்.
இன்று பதவியேற்றுக் கொண்டவர்கள்: அஜித் பவார் (துணை முதல்வர்), சக்கன் பூஜ்பால், திலீப் வால்ஸே பாட்டில், அதிதி டட்கரே, தனஞ்சய் முண்டே, ஹசன் முஷ்ரிஃப், ராம்ராஜே நிம்பல்கர், சஞ்சய் பான்ஸோடே, அனில் பாய்தாஸ் பட்டீல் ஆகியோ இன்று பதவியேற்றுக் கொண்டனர்.