புல்தானா: மகாராஷ்டிராவில் பேருந்து நிலைதடுமாறி கவிழ்ந்ததில், டீசல் டேங்க் வெடித்து தீப்பற்றியது. இந்த பயங்கர விபத்தில் 3 குழந்தைகள், 10 பெண்கள் உட்பட 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, புணேவுக்கு சென்றுகொண்டிருந்தது. நள்ளிரவு 1.30 மணி அளவில் புல்தானா மாவட்டம் பிம்பல்குதா கிராமம் அருகே சும்ருதி மகாமார்க் விரைவு சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த விபத்து தடுப்பு கம்பி மற்றும் தரைப்பாலத்தின் சுவரில் மோதி கவிழ்ந்தது. அதிவேகத்தில் சென்றபோது திடீரென கவிழ்ந்ததால், பேருந்தில் தீப்பிடித்தது.
என்ன நடக்கிறது என்று பயணிகள் ஊகிப்பதற்குள், டீசல் டேங்க்கிலும் தீப்பற்றி வெடித்தது. இதில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது.
பேருந்தின் ஓட்டுநர், கிளீனர் மற்றும் 6 பயணிகள் மட்டுமே வெளியே குதித்து உயிர் தப்பினர். மற்ற அனைவரும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் 3 குழந்தைகள், 10 பெண்கள் உட்பட 26 பயணிகள் உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர்.
இதற்கிடையே, விபத்து நடந்ததை அறிந்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து,போக்குவரத்து உதவி மையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு படையினர் வந்து, தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்துவிட்டது. விபத்தில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக புல்தானா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பேருந்தில் கருகி உயிரிழந்த பயணிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. டிஎன்ஏ சோதனைக்கு பிறகு, உறவினர்களிடம் உடல்ஒப்படைக்கப்படும் என்று புல்தானா மாவட்ட ஆட்சியர் தும்மாத் தெரிவித்துள்ளார். உயிரிழந்த பயணிகளின் உறவினர்களுக்கு உதவ, நாக்பூர் பேரிடர் மேலாண்மை பிரிவு, புல்தானா மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உதவி மையத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்: பேருந்து விபத்துக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘‘மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ள பேருந்து விபத்தால் மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயம்அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டோருக்கு உள்ளூர் நிர்வாகம் முடிந்த உதவியை வழங்கி வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம், காயம் அடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் என துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உதவிக்கு வராத வாகனங்கள்: விபத்தில் உயிர் தப்பிய பயணி ஒருவர் கூறும்போது, ‘‘பேருந்து மோதி கவிழ்ந்த உடனே தீப்பிடித்துவிட்டது. நானும், என் அருகில் அமர்ந்த பயணியும், பின்பக்க ஜன்னலை உடைத்து தப்பினோம். 4 முதல் 5 பயணிகள் மட்டுமே தப்ப முடிந்தது. மற்றவர்களால் தப்பிக்க முடியவில்லை. நாங்கள் பேருந்தில் இருந்து குதித்து, நெடுஞ்சாலையில் சென்ற இதர வாகனங்களின் உதவியை நாடினோம். ஆனால், எந்த வாகனமும் நிற்கவில்லை. போலீஸார், தீயணைப்பு படையினர்தான் உடனே வந்து தீயணைப்பு, மீட்பு பணியில் ஈடுபட்டனர்’’ என்றார்.
விபத்தை நேரில் பார்த்த உள்ளூர் நபர் கூறும்போது, ‘‘எங்களை சிலர் உதவிக்காக அழைத்ததால், சம்பவ இடத்துக்கு ஓடிச் சென்றோம். பேருந்து முழுவதும் தீப்பற்றி எரிந்துகொண்டு இருந்தது. உள்ளே இருந்தவர்கள் கண்ணாடியை உடைக்க முயன்றும் வெளியே வர முடியாமல் தவித்தது வேதனையாக இருந்தது. தீ பயங்கரமாக எரிந்ததால், எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் நின்று உதவிக்கு வந்திருந்தால், பலரது உயிரை காப்பாற்றி இருக்கலாம்’’ என்றார்.