மும்பையில் கடந்த ஓராண்டில் மாநகராட்சியில் நடந்த ஊழல்களுக்கு எதிராக சிவசேனா (உத்தவ்) சார்பாகப் போராட்டம் நடந்தது. இதையொட்டி மாநகராட்சித் தலைமை அலுவலகத்திற்குப் பின்புறம் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, “ஒப்பந்ததாரர்களுக்கு அரசுப் பணிகளைத் தொடங்கும் முன்பே 600 கோடி ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். அதிலும் 40 சதவிகித கமிஷனை எடுத்துக்கொள்கின்றனர். உங்களது திருட்டு ஃபைல் தயாராக இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கான இடம் காண்பிக்கப்படும். மும்பையில் அனைத்து சாலைகளையும் கான்கிரீட் சாலையாகப் போடப்போகிறார்கள். சாலைக்கு அடியில் கேஸ் பைப், வயர்கள் என 42 பயன்பாட்டுப் பொருள்கள் இருக்கின்றன. எனவே சாலையைத் தோண்ட 16 ஏஜென்சிகளின் ஒத்துழைப்பு தேவை. ஆரம்பத்தில் 400 சாலைகள் கான்கிரீட் மயமாக்கப்படும் என்று சொன்னீர்கள். அதன் பிறகு சவால்களை உணர்ந்து 50 சாலைகள் மட்டும் கான்கிரீட் மயமாக்கப்படும் என்று சொல்கிறீர்கள்.
அந்த சாலைகளின் பெயர்களையும் குறிப்பிடவில்லை. பணிகளை தங்களுக்கு நெருக்கமான ஐந்து ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளனர். சாலை பணியின் மதிப்பு ரூ.5,000 கோடிதான். ஆனால் அதனை ரூ.6,080 கோடியாக அதிகரித்துள்ளனர். இதில் 40 சதவிகிதம் கமிஷன். மும்பையில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைத்துள்ளீர்கள். இதேபோன்று தானே, நாசிக், புனேயிலும் அமைக்க முடியுமா… நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், மும்பையில் கொள்ளையடித்தவர்களை விடமாட்டோம். அவர்களை சிறையில் அடைப்போம். எங்களது கட்சியின் முன்னாள் கவுன்சிலர்களை ஷிண்டே அணியில் சேரவைக்க ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பயன்படுத்துகின்றனர். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. நேரம் வரும்போது அதனை வெளியிடுவேன்” என்று தெரிவித்தார்.
மும்பையின் மெட்ரோ சினிமாவிலிருந்து கட்சித் தொண்டர்கள் பேரணியாகச் சென்று மாநகராட்சித் தலைமை அலுவலகத்துக்குப் பின்புறம் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில் முன்னாள் கவுன்சிலர்கள், முன்னாள் மேயர்கள் பலரும் கலந்துகொண்டனர். இப்பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்துள்ள பேட்டியில், “ஊழலுக்காகப் பேரணி நடத்துவதாக இருந்தால் மாதோஸ்ரீ 1-லிருந்து (தாக்கரே இல்லம்) மாதோஸ்ரீ 2-க்குத்தான் அவர்கள் பேரணி நடத்தவேண்டும்.
அவர்கள் தவறான இடத்தில் பேரணி நடத்தியுள்ளனர். மாதோஸ்ரீயில்தான் அனைத்தும் நடந்தது. மாநகராட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரித்தவுடன் ஊழலுக்கு எதிராகப் பேரணி நடத்துகின்றனர். கொரோனா சென்டர்களை நடத்த யார் ஒப்பந்தம் கொடுத்தது. முதலில் கொள்ளையடித்துவிட்டு பின்னர் ஊழலுக்கு எதிராக மோர்ச்சா நடத்துகின்றனர்.
கொரோனா காலத்தில் மக்கள் மடிந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் பணம் பார்த்துக்கொண்டிருந்தனர். அனைத்து கொள்ளையர்களும் மாநகராட்சியை சூழ்ந்துள்ளனர். கொரோனா ஊழல் குறித்து நாங்கள் விசாரிக்கவில்லை. அமலாக்கப் பிரிவு எங்களிடம் இல்லை.
அமலாக்கப் பிரிவு விசாரணையை தொடங்கியவுடன் அவர்கள் பேரணியை தொடங்கியுள்ளனர். மாநகராட்சியில் இருக்கும் வைப்புத்தொகை மக்களுக்கானது. அதை மக்களுக்காகப் பயன்படுத்துவது அவசியம். நாங்கள் வைப்புத்தொகையை எடுப்பதாக தவறான தகவலைப் பரப்புகின்றனர். கொள்ளையர்கள் திருட்டைப் பற்றி பேசுகின்றனர்” என்றார்.
முன்னதாக ஆதித்ய தாக்கரேயிக்கு மிகவும் நெருக்கமான ராகுல் கனல், ஏக்நாத் ஷிண்டே அணியில் சேர்ந்தார். அவர் ஏக்நாத் ஷிண்டேயை அவரது அரசு இல்லத்தில் சந்தித்து தன்னை சிவசேனாவில் இணைத்துக்கொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில், “சிவசேனா (உத்தவ்) எனக்கு எவ்வளவோ கொடுத்திருக்கிறது. நானும் திரும்ப கொடுத்திருக்கிறேன்.
கொரோனா காலத்தில் நாங்கள் பணியாற்ற மட்டுமே செய்தோம். பணம் சம்பாதிக்கவில்லை. நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத் மரணம் குறித்து விசாரணை நடத்தவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். உடனே அது குறித்து விசாரிக்கப்படும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.