புதுடெல்லி: டெல்லியில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 17-வது இந்திய கூட்டுறவு மாநாடு நேற்று தொடங்கியது. சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கார்ப்பரேட் துறை போன்ற வசதிகளும், தளங்களும் கூட்டுறவுத் துறைக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் நலன் மற்றும் விவசாயத்துக்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவழிக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளில் விவ சாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சம் கோடியை நேரடியாக செலுத்தி உள்ளோம். பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். கோடிக்கணக்கான சிறு விவசாயிகள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மத்திய அரசின் பலனைப் பெறுகின்றனர்.
டிஜிட்டல் இந்தியாவை மத்திய அரசு ஊக்குவித்துள்ளது, இதன்மூலம் நேரடி பலன்கள் பயனாளிகளை நேரடியாக சென்றடைகிறது. பண பரிவர்த்தனைகளை சார்ந்திருப்பதை அகற்றுவதே இதன் நோக்கமாகும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியாவின் ஆதிக்கம் நமது அடையாளமாக மாறியுள்ளது.
ரூ.90 ஆயிரம் கோடி: நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களை ஊக்கப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2014-ம் ஆண்டுக்கு முந்தைய 5 ஆண்டுகளில் விவசாயத்துக்காக ரூ.90 ஆயிரம் கோடி செலவிட்டனர். நாங்கள் பிஎம்-கிசான் திட்டத்திற்காக மட்டும் 3 மடங்கு அதிகமாக செலவு செய்து உள்ளோம். 9 ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகளில் இருந்து ரூ.70 ஆயிரம் கோடி மதிப்புள்ள எத்தனால் வாங்கப்பட்டுள்ளது. இந்தியாவை தன்னம்பிக்கை கொண்டதாக மாற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
பால் பவுடரில் இருந்து வெண்ணெய் முதல் நெய் வரை நம் இந்திய விளைபொருட்களுக்கு உலகளவில் அதிக தேவை உள்ளது. நமது சிறு விவசாயிகளுக்கு சம்பாதிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இது அமையும். உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு என்ற இலக்கை எட்டியுள்ளோம், அதற்கு பால் கூட்டுறவு சங்கங்களே காரணம்.
வளர்ந்த, தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி இன்று நம் நாடு செயல்பட்டு வருகிறது. நமது ஒவ்வொரு இலக்கையும் அடைவதற்கு, அனைவரின் முயற்சியும் மிக முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.