பெங்களூரு: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த, கர்நாடகாவை சேர்ந்த ஒன்பது பேர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த ஒன்பது பேர், பயங்கரவாதத்தை ஊக்குவிக்க, சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடான சிரியாவில் செயல்பட்டு வரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, இந்தியா முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த, சதி திட்டம் தீட்டி இருந்தது.
இந்த அமைப்புடன் கர்நாடகா, கேரளாவில் வசித்து வரும், சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது.
இதுகுறித்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய விசாரணை அமைப்பு விசாரணை நடத்துகிறது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலம் ஷிவமொகாவில், தேசியக் கொடியை எரித்த வழக்கில் சையத் யாசின், 21, மாஸ் முனீர் அகமது, 22, ஆகியோரை, 2022ல், ஷிவமொகா ரூரல் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவருக்கும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், ஐ.எஸ்., அமைப்பின் உத்தரவுப்படி கர்நாடகாவில் பயங்கரவாத, சதி திட்டங்களை அரங்கேற்ற திட்டம் தீட்டியதும் தெரிந்தது. இதையடுத்து இவ்வழக்கு என்.ஐ.ஏ.,க்கு மாற்றப்பட்டது.
என்.ஐ.ஏ., அதிகாரிகளின் விசாரணையில், கர்நாடகாவை சேர்ந்த முகமது ஷாரிக், 25, ரீஷான் தாஜுதீன் ஷேக், 22, ஹுசைர் பர்ஹான் பெய்க், 22, மசின் அப்துல் ரஹ்மான், 22, நதீம் அகமது, 22, ஜபியுல்லா, 32, நதீம் பைசல், 27, ஆகியோருக்கும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததும், இந்தியா முழுவதும் சதி திட்டங்களை அரங்கேற்ற, திட்டம் தீட்டியதும் தெரிந்தது.
இவர்கள் ஒன்பது பேர் மீதும், பெங்களூரில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த, கர்நாடகாவை சேர்ந்த ஒன்பது பேர் மீதும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், சொத்து இழப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ரீஷான் தாஜுதீன் ஷேக், 22, மசின் அப்துல் ரஹ்மான், 22, நதீம் அகமது, 22, இவர்கள் மூவரும் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்கல் இன்ஜினியரிங் படிக்கின்றனர்.
இந்தியாவில் தாக்குதல் நடத்த நிகழ்ச்சி நிரலை தயாரிக்கவும், எதிர்காலத்தில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவற்காக, ரோபோட்டிக் படிப்புகளை படிக்கவும் ஐ.எஸ்., அமைப்பு, கேட்டு கொண்டுள்ளது. ஷாரிக், மாஸ் முனீர் அகமது, சையத் யாசின் ஆகிய மூவரும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்க குற்றவியல் சதிதிட்டம் தீட்டி வந்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை, இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மூவரும் தீவிரமாக செயல்பட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, ‘கிரிப்டோகரன்சி’ மூலம் நிதி உதவி கிடைத்துள்ளது.
இவ்வாறு குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள முகமது ஷாரிக், மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்