சென்னை: Jailer First Single (ஜெயிலர் ஃபர்ஸ்ட் சிங்கிள்) ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்ற அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்த தர்பார் படத்தையும், சிவா இயக்கத்தில் நடித்த அண்ணாத்த படத்தையும் ரஜினிகாந்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இரண்டு படங்களும் அவரை ஏமாற்றிவிட்டன. சிவாவுக்கு அவர் தங்க சங்கிலி பரிசளித்தாலும் சிவா மூலம் அஜித்துக்கு கிடைத்த மாஸ் ஹிட் ரஜினிக்கு கிடைக்கவில்லை. இதனால் ரொம்பவே அப்செட்டில் இருந்தாராம் ரஜினிகாந்த். இதனையடுத்துதான் இளம் இயக்குநருடன் இணையலாம் என முடிவு செய்து நெல்சனுடன் கை கோர்த்தார்.
நிரூபிப்பாரா நெல்சன் திலீப்குமார்: கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் மூன்றாவது படமாக விஜய்யை வைத்து பீஸ்ட் இயக்கினார். முதல் இரண்டு படங்கள் போலவே அந்தப் படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்த்திருந்த நெல்சனுக்கு பலத்த அடி விழுந்தது.
குறிப்பாக சமூக வலைதளங்களில் பலரும் அவரை ட்ரோல் மெட்டீரியலாக மாற்றினர். இப்படிப்பட்ட சூழலில்தான் ரஜினியை இயக்க ஒப்பந்தமானார் நெல்சன். எனவே விஜய்யிடம் விட்டதை ரஜினியை வைத்து பிடித்து மீண்டும் தன்னை நிரூபிக்க காத்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.
ரஜினி கொடுத்த ஐடியா?: பீஸ்ட் படத்தின் தோல்வியால் ரஜினிகாந்த் நெல்சன் மீது நம்பிக்கை இழந்துவிட்டார் எனவும், ஒருகட்டத்தில் அவரை படத்திலிருந்து தூக்குவதற்கு தயாராகிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஒருவழியாக ஜெயிலர் படத்துக்கு நெல்சனே இயக்குநராக இறுதி செய்யப்பட்டார்.
அதுமட்டுமின்றி படத்தை பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக்குவதும், அதற்காக பல மொழிகளில் இருந்தும் ஸ்டார்களை களம் இறக்குவதும் என ரஜினிகாந்த் ஐடியா கொடுத்தாராம். அதன்படிதான், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் என நட்சத்திர பட்டாளம் களமிறக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
ஷூட்டிங் ஓவர்: படத்தின் ஷூட்டிங் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்துவந்த சூழலில் இதன் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. அதுதொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலானது. படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து நடிகை தமன்னாவுக்கு ஆன்மீக புத்தகம் ஒன்றையும் ரஜினிகாந்த் பரிசளித்தார். மேலும் திரைப்படமானது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் சிங்கிள் ப்ரோமோ: இந்நிலையில் படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் படத்திலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கு ரசிகர்கள் ரெடியாகியிருக்கின்றனர். அந்தவகையில் படத்தின் முதல் சிங்கிளுக்கான ப்ரோமோ வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அதற்கு ஒரு வீடியோவை ரிலீஸ் செய்து படத்தை தயாரித்திருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.