ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியது முதல் அதிரடி அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
ப்ளூ டிக், கோல்டன் டிக் கட்டணச் சர்ச்சை, ஆட்குறைப்பு நடவடிக்கை, பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்கு முடக்கம், புதிய சிஇஓ பணி நியமனம் என ட்விட்டரில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துகொண்டே இருக்கிறார் எலான்.
ட்விட்டரில் முதலீடு செய்த பணத்தைப் பல மடங்கு லாபத்துடன் திருப்பி எடுக்கவே எலான் மஸ்க் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30ம் தேதி) பலரின் ட்விட்டர் கணக்குகள் சிறிது நேரம் வேலை செய்யாமல் ட்விட்டரே முடங்கிப் போய் இருந்தது.
இந்நிலையில் எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியதுபோல ட்விட்டரில் ஒரு நாளில் இனிமேல் இத்தனை பதிவுகளை மட்டுமே படிக்க வேண்டும் என எலான் மஸ்க் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், “அதிகமான ட்விட்டர் பதிவுகளால் டேட்டா ஸ்கிராப்பிங் மற்றும் சிஸ்டத்தைக் கையாளுதல் உள்ளிட்டவை மிகவும் கடினமாக இருக்கிறது. இதன் காரணமாக சில கட்டுப்பாடுகளை ட்விட்டரில் கொண்டு வருகிறோம்.
அதன் படி,
– வெரிஃபடு டிக் வைத்திருப்பவர்கள் ஒரு நாளைக்கு 6000 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்.
– வெரிஃபடு டிக் இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும்.
– வெரிஃபடு இல்லாமல் புதிதாகக் கணக்கு தொடங்கியவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும். கூடிய விரைவில் இது 8000, 800, 400 என்பதாக அதிகரிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதற்குக் காரணம் சொல்லும் எலான், “நாம் அனைவரும் ட்விட்டருக்கு அடிமையாகி இருக்கிறோம். அதிக நேரம் ட்விட்டரைப் பயன்படுத்துகிறோம். இதைக் கட்டுப்படுத்தவே இந்தப் புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. நான் இந்த உலகத்திற்கு நல்லதைத்தான் செய்திருக்கிறேன்.
இனி நீங்கள் ஆழ்ந்த மயக்கத்திலிருந்து விழித்து போனை/ட்விட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதை விட்டுவிட்டு உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள். அவர்களை இனி பார்க்க ஆரம்பியுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான நெட்டிசன்கள் ட்வீட்கள் மூலம் ட்விட்டரையும், எலான் மஸ்க்கையும் கடுமையாகத் தாக்கி வருகின்றனர். ட்ரோல்கள், கடுமையான விமர்சனங்கள் என ட்விட்டரே கலவரமாகியுள்ளது.
பல தொழில்நுட்ப வல்லுநர்கள் இதை எலானின் மிகப்பெரிய மார்க்கெட்டிங் யுக்தியாகவேப் பார்க்கின்றனர். கட்டணம் செலுத்தும் வெரிஃபைடு டிக்குகளை நோக்கி பயனர்களை வலுக்கட்டாயமாகத் தள்ளவே இந்தப் புதிய நடவடிக்கையை எலான் கொண்டு வந்துள்ளதாக விமர்சிக்கின்றனர். இந்த நிலை நீடிக்குமானால் ஏராளமான பயனர்கள் ட்விட்டரை விட்டு வெளியேறிவிடுவார்கள். ட்விட்டர் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் என்று எச்சரிக்கின்றனர்.
எலான் மஸ்க்கின் இந்த அதிரடி உத்தரவு குறித்த உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்கள்.