சென்னை: வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை நடத்திய தமிழ் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘இந்திய வரலாற்றை முழுமையாக அறிவதில் சில இடைவெளிகள் உள்ளன. அதை நிரப்பும் ஆராய்ச்சிகளை தமிழக அரசு முன்னெடுக்கும்’’ என்று உறுதிபட தெரிவித்தார்.
வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையும், சாக்ரமென்டோ தமிழ்மன்றமும் இணைந்து நேற்று நடத்திய தமிழ் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது:
மொழியின் பெயரை தனது பெயராக வைத்துக் கொள்வதில் முன்னோடி இனம் நாம்தான். தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்ச்செல்வி என்ற பெயர் கொண்டவர்கள் 18 வயதுக்கு மேல், சுமார் 3.75 லட்சம் பேர் உள்ளதாக ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கணக்கிட்டு சொல்லியுள்ளார்.
மொழி என்பது நம்மை பொருத்தவரை எழுத்தாக இல்லை, ரத்தமாக இருக்கிறது. உலகம் தோன்றியதை கணிக்க முடியாததுபோல, தமிழின் தோற்றம், தமிழ் இனத்தின் தோற்றத்தையும் கணிக்க முடியாத அளவுக்கு தொன்மையான வரலாறு நமக்கு உண்டு. அதனால்தான், ‘இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலத்தில் இருந்து எழுதப்பட வேண்டும்’ என்று செயல்பட்டு வருகிறோம்.
தமிழகத்தில் பொது ஊழிக்கு முன் 6-ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது. படிப்பறிவு, எழுத்தறிவு பெற்ற மேம்பட்ட சமூகமாக நாம் விளங்கினோம் என்பதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தி உள்ளது.
கீழடிக்கு அருகே அகரம் அகழாய்வு தளத்தில் சேகரிக்கப்பட்ட மண்மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அங்கு நெல் மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சிவகளையில் முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட உமிநீங்கிய நெல்மணிகளின் காலம் பொது ஊழிக்கு முன் 1155 எனகண்டறியப்பட்டுள்ளது. ‘தண்பொருநை’ எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கீழடி உட்பட 7 இடங்களில் விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சிவகளையில் மண்மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அங்கு நீர் செல்லும் செங்கல் வடிகாலில் நன்னீர் சென்றுள்ளதும், தேக்கி வைக்கப்பட்ட நீர்நிலையில் இருந்துஇந்த நீர் கொண்டு செல்லப்பட்டதும் தெரிந்தது.
மயிலாடும்பாறையில் கிடைத்தபொருள் பொது ஊழிக்கு முன் 1615 – 2172 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இரும்பின்பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, காலத்தால் முந்தியது மயிலாடும்பாறைதான். இப்படி ஒவ்வொரு ஆய்வாக வர வர, தமிழரின் தொன்மை வெளிச்சம் பெற்று வருகிறது.
‘சிந்து பண்பாடு 5,000 ஆண்டுகள் பழமையானது. அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ். அங்கு வாழ்ந்த மக்கள் சங்ககால தமிழரின் மூதாதையர்’ என்று ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் நிறுவியுள்ளார். சிந்துவெளியில் ‘காளைகள்’தான் இருந்தன. இது திராவிடச் சின்னம். சிந்துவெளி முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழரின் தொன்மையை பறைசாற்றுகின்றன.
தொல்லியல் ஆய்வுகளுக்கு தமிழக அரசு ஊக்கமளித்து வருகிறது. இந்திய வரலாற்றை முழுமையாக அறிவதில் சில இடைவெளிகள் உள்ளன. அதை நிரப்பும் ஆராய்ச்சிகளை தமிழக அரசு முன்னெடுக்கும்.
நாட்டிலேயே அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழகத்தில்தான். அதிலும் குறிப்பாக, வைகையை சுற்றித்தான். தமிழர் பண்பாட்டின் முக்கியத்துவம், தொன்மையை நிரூபிக்கவும், அதை உலக அளவில் கொண்டு செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.