டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்தவர் சச்சின். இவர் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட செல்போன் விளையாட்டான பப்ஜியை விளையாடிவந்திருக்கிறார். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் என்ற பெண்ணும் பப்ஜி விளையாடியிருக்கிறார். இந்த நிலையில், இருவருக்குள்ளும் நட்பு வளர்ந்து, அது காதலாக மாறியிருக்கிறது. அதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து வாழலாம் என முடிவுசெய்திருக்கிறார்கள்.
அதற்காக சீமா குலாம் ஹைதர் என்ற அந்தப் பெண் கடந்த மே மாதம், தன்னுடைய 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, டெல்லியை அடைந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து சச்சினும் சீமா குலாம் ஹைதரும் சேர்ந்து கிரேட்டர் நொய்டாவின் ரபுபுரா பகுதியில் வாடகை வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், நொய்டாவில் பாகிஸ்தானியப் பெண் ஒருவர் வசிப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
காவல்துறை அவர்களை விசாரிக்கும் முன்னரே இந்த தகவலை அறிந்துகொண்ட சச்சின், சீமா குலாம் ஹைதர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வெளியேறவிட்டார். ஆனால் காவல்துறை அவர்களைக் கண்டுபிடித்து கைதுசெய்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையிடம் பேசிய வீட்டின் உரிமையாளர் பிரிஜேஷ், “இருவரும் கணவன் மனைவியாகவே வந்தார்கள். நீதிமன்றத்தில் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்தார்கள்.
பாகிஸ்தானியப் பெண்ணும் இந்தியப் பெண்கள்போலவே சல்வார் சூட் மற்றும் புடவை அணிந்திருந்திருப்பார்கள். அதனால் எங்களுக்குச் சந்தேகம் வரவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, மேலும் விசாரணை நடத்தி வருகிறது.