தென்னிந்தியாவில் அடித்தளம் அமைக்க, பல ஆண்டுகளாகப் போராடி வரும் பா.ஜ.க, கர்நாடகத்தில் மட்டுமே ஆட்சியை தன்வசம் வைத்திருந்தது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 224 தொகுதிகளில், பா.ஜ.க வெறும் 66 இடங்களை மட்டுமே பெற்று, படுதோல்வியைத் தழுவியது.
தேர்தல் முடிந்ததுமே, “கர்நாடகத்தில் பா.ஜ.க-வின் தலைமை சரியில்லாததால்தான் தோல்வியைச் சந்தித்தோம். கட்சித் தலைமையை மாற்ற வேண்டும்’’ என பா.ஜ.க-வின் பல தலைவர்கள், கட்சி மேலிடத்துக்குப் புகார் தெரிவித்தனர்.
இது ஒருபுறமிருக்க உட்கட்சிப்பூசலும் உச்சத்தை தொட்டிருப்பதால், கர்நாடகா பா.ஜ.க-வுக்குள் அணுகுண்டு வெடித்ததைப்போல் புகைச்சலாகவே இருக்கிறது. கடந்த வாரம் பகால்கோட் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில், முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட பலவரையும் தாக்கிப்பேசி தங்களுக்குள்ளேயே பா.ஜ.க-வினர் வார்த்தைப்போர் நடத்தினர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வாக சில முக்கிய தலைவர்கள் தங்களுக்குள் போட்டியைத் தொடங்கியிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவரைக்கூட தீர்மானிக்க முடியாமல், பா.ஜ.க மேலிடம் குழப்பக்கடலில் சிக்கித் தவிக்கிறது.
யாரெல்லாம் போட்டியில்?
கர்நாடகா பா.ஜ.க-வைப் பொறுத்தவரையில், பா.ஜ.க பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், தென்னிந்திய மாநிலங்களில் பொறுப்பாளராக இருக்கிறார். அதீத அரசியல் செல்வாக்குள்ள பி.எல்.சந்தோஷ் ஒருபுறம் எதிர்கட்சித் தலைவராக தீவிரம் காட்டி வருகிறார்.
சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, ‘பி.எல்.சந்தோஷின் தலையீடு மற்றும் தவறான வழிகாட்டுதலால்தான், பா.ஜ.க தோல்வியைச் சந்தித்தது’ என எடியூரப்பா குழுவினர் ஒருபுறம் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ‘முன்னாள் முதல்வராக இருந்ததால், எனக்கே எதிர்கட்சித் தலைவர் பதவியைக் கொடுக்க வேண்டும்’ என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும், அரசியல் களத்தில் செல்வாக்கின் அடிப்படையில் தனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமென முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அஸ்வத் நாராயணனும் முயன்று வருகின்றனர்.
இதற்கிடையே, ’பா.ஜ.க தலைவர்களான முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, சில முன்னாள் அமைச்சர்கள், காங்கிரஸாருடன் சமாதான அரசியல் செய்கின்றனர்’ என புகார் தெரிவித்து, அரசியல் களத்தில் அனலைக் கிளப்பி வரும் பசனகெளவுடா பாட்டில் யாத்னலும் போட்டியில் குதித்திருக்கிறார்.
முதன் முறையாகச் சட்டப்பேரவையில்…
இதுபோன்ற போட்டிகளால், கர்நாடகா அரசியலில் முதன் முறையாக, எதிர்க்கட்சித் தலைவரைக்கூட தேர்வுசெய்ய முடியாமல் பா.ஜ.க மேலிடம் திக்கித் திணறி வருகிறது. இதன் விளைவால், இன்று நடந்த கர்நாடகா சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், முதன் முறையாக எதிர்கட்சித் தலைவரே இல்லாமல், பா.ஜ.க உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
இதற்கிடையில் உட்கட்சிப்பூசலைச் சமாளிக்கவும், உட்கட்சிப்பூசலால் கட்சி பிளவுபட்டுப்போகாமல் இருக்கும் வகையிலும், எதிர்க்கட்சித் தலைவரை தேர்வுசெய்ய, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் திட்டமிட்டிருக்கின்றனர்.
கட்சியினரிடம் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக, பார்வையாளர்களாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்று மாலை, பெங்களூருக்கு வந்த இருவரும் கட்சியினருடன் அவசரக் கூட்டம் நடத்தி வருகின்றனர். நாளை எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை அறிவிப்பதாக, பா.ஜ.க டெல்லி வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
‘நியமனம் முடிந்தால்தான், உண்மையான உட்கட்சிப்பூசலின் நிலை தெரியவரும். ஒருவேளை பா.ஜ.க மேலிடம் தவறான முடிவெடுத்து, உட்கட்சிப்பூசல் மேலும் வலுப்பெற்றால், நிச்சயம் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுக்குப் பின்னடைவும் ஏற்படும்’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தும் கர்நாடகா அரசியல் களம் சூடாகவே இருக்கிறது. நாளை நியமனம் முடிந்தால், காட்டுத்தீ ஏற்படுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்…