சிவ்தாஸ் மீனா போட்ட உத்தரவு: நான்கே நாள்களில் மீண்டும் அதிகாரிகளை அழைத்த ஸ்டாலின்

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்

தலைமையில் இன்று (ஜூலை 3) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், பல்வேறு அரசுதுறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழ்நாடு அரசு மனிதவள மேம்பாடு, மக்கள் நல்வாழ்வு, சமூக நீதி, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்ச்சி என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு சிறப்பு திட்டங்களை ஒவ்வொரு துறையிலும் முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டங்களின் நிலை குறித்து அவ்வப்போது குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார்.

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என்ற பெயரில் இதுவரை 5 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இன்று 6ஆவது கூட்டம் நடைபெற உள்ளது.

ஜூன் 28ஆம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், உயர்கல்வி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, நீர்வளம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, பொது மற்றும் மறுவாழ்வு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் ஆகிய 13 துறைகளைச் சார்ந்த நடைமுறையில் உள்ள 55 திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், 35 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நான்கு நாள்களில் மீண்டும் இந்த கூட்டம் கூட்டப்படுவது குறித்து விசாரிக்கையில் கோட்டையில் ஏற்பட்ட அதிகாரிகள் மாற்றத்தை காரணமாக கூறுகின்றனர்.

தமிழக அரசில் கடந்த இரு ஆண்டுகளாக தலைமைச் செயலாளராக பணியாற்றிய இறையன்பு ஜூன் 30ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். அன்றைய தினமே சிவ்தாஸ் மீனா தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார்.

சிவ்தாஸ் மீனா தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றதுமே அதிரடியாக பல்வேறு துறைகளில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தார்.

தமிழக அரசின் சிறப்பு திட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு இளம் பகவத் ஐஏஎஸ் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகளிடம் சிறப்பு திட்டங்களின் நோக்கம், முக்கியத்துவம், அதை செயல்படுத்தும் விதம் குறித்து முதல்வர் ஸ்டாலின் விரிவாக பேச உள்ளதாக சொல்கிறார்கள். இந்த திட்டங்களை மக்கள் மத்தியில் சரியாக கொண்டு சென்றுவிட்டால் மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு சாதகமான சூழல் நிலவ வாய்ப்புள்ளதாக திமுக தலைமை நினைப்பதாக சொல்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.