சீன் மாறுதே.. பாகிஸ்தான் பக்கம் ஒதுங்கிய ஜாக் மா.. படு சீக்ரெட்டாக அமைந்த பயணம்! என்ன செய்ய போகிறார்

இஸ்லாமாபாத்: சீனாவின் தொழிற்துறையின் முகமாக இருந்த ஜாக் மா சில காலமாக சைலண்டாக இருக்கும் நிலையில், இப்போது திடீரென அவர் பாகிஸ்தான் சென்றுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஒரு காலத்தில் சீனாவின் தொழிற்துறை முகமாக இருந்த ஜாக் மா.. சீனாவில் தொழிற்துறையில் ஆர்வம் இருந்தால் எந்தளவுக்குச் சாதிக்கலாம் என்பதை உலகிற்குக் காட்ட ஜாக் மாவை சீனா பயன்படுத்திக் கொண்டது.

இருப்பினும் ஜாக் மா குறுகிய காலத்தில் இந்தளவுக்கு வளர சீன அரசு மறைமுகமாக அவருக்குக் கொடுத்த ஆதரவும் முக்கிய காரணம். ஆனால், என்று அவர் சீன அரசு குறித்து சில சர்ச்சை கருத்துகளைக் கூறினாரோ அப்போதே அவருக்குப் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது.

ஜாக் மா: சீனா வேகமாக வளர பல சீர்திருத்தங்கள் தேவை என்றும் சீன வங்கிகள் அடகுக்கடை மனநிலையுடன் செயல்படுவதாகவும் கடந்த 2020இல் நிகழ்ச்சி ஒன்றில் ஜாக் மா விமர்சித்துப் பேசியிருந்தார். அதன் பிறகு ஒட்டுமொத்த சீன விசாரணை அமைப்புகளும் ஜாக் மா எதிராகத் திரும்பியது. அவரது Ant நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட இருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அது நிறுத்தப்பட்டது.

லைம் லைட்டில் இருந்து அவர் மெல்லக் காணாமல் போனார். சீனாவில் இருந்து வெளியேறி அவர் ஜப்பான் சென்றுவிட்டதாக எல்லாம் தகவல் வெளியானது. இதற்கிடையே யாரும் எதிர்பாராத விதமாக ஜாக் மா பாகிஸ்தான் வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முதலீட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் முஹம்மது அஸ்பர் அஹ்சன் இதனை உறுதி செய்துள்ளார்.

பாகிஸ்தான் பயணம்: கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று லாகூர் சென்ற ஜாக் மா ஒரு நாள் அங்கேயே தங்கியுள்ளார். அவர் எதற்காகப் பாகிஸ்தான் வந்தார் என்பது குறித்த கூடுதல் தகவல் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த பயணத்தில் ஜாக் மா அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஊடகத்தினர் என யாரையும் சந்திக்கவில்லையாம்.

அவர் எங்கே தங்கினார் என்பது குறித்த தகவல்கள் கூட வெளியாகவில்லை. ஒரு நாள் பாகிஸ்தானில் இருந்த ஜாக் மா ஜூன் 30ஆம் தேதி பிரைவேட் ஜெட் மூலம் அங்கிருந்து கிளம்பியுள்ளார். ஜாக் மாவின் இந்த பயணம் குறித்து ரகசியம் காக்கப்பட்டே வருகிறது. அதேநேரம் பாகிஸ்தானில் அவர் முதலீடு செய்யலாம் என்றும் வரும் நாட்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

 What is the reason behind Jack Mas Sudden Pakistan Trip

தனி டீம்: அவருடன் மொத்தம் 7 பேர் பாகிஸ்தான் சென்றுள்ளனர். சீனாவைச் சேர்ந்த 5 பேர், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 7 பேர் அங்கு சென்றுள்ளனர். இந்த குழு நேபாளத்தில் இருந்து பிரைவேட் ஜெட் மூலம் பாகிஸ்தானுக்கு அவர்கள் சென்றுள்ளனர். இந்த பயணத்தில் ஜாக் மா மற்றும் அவரது குழுவினர் பாகிஸ்தானில் முதலீடு செய்வது குறித்து ஆலோசித்துள்ளனர். அங்குள்ள முக்கிய தொழிலதிபர்கள் உடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இருப்பினும், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதேநேரம் இது ஜாக் மாவின் தனிப்பட்ட பயணம் என்றும் இதற்கும் சீன அரசுக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. சொல்லப்போனால் ஜாக் மாவின் பயணம் குறித்து பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்திற்குக் கூட தகவல் தெரிவிக்கப்படவில்லையாம்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.