தென்காசி: தென்காசி மாவட்டத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் பாரத் மாதாகி ஜே என கோஷமிட்டுவிட்டு, காரில் தப்பிச் சென்றவர்களை திமுகவினர் விரட்டிப்பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் இந்நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் திமுக உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திடங்கள், அவர் செய்த அரசியல் சாதனை குறித்து இக்கூட்டங்கள் வழியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்,எஸ்.பாரதி கலந்துகொண்டு பொதுக்கூட்டத்தில் பேசினார்.
பாரதி தனது உரையை முடித்துக்கொண்டு கிளம்பிய நிலையில் காரில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டுள்ளனர். இது கூட்டத்தில் இருந்த திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இவர்கள் ஐவரும் விடாமல் கோஷம் எழுப்பிக்கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் கடுப்பான திமுகவினர் காரை துரத்தி சென்று மறித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் திமுகவினரை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அதற்குள் கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. காரிலிருந்த ஐவர் மீதும் தாக்குதல் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருந்திருக்கிறது. எனவே கூடுதல் போலீசாரை அழைத்து திமுகவினரை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தில் காரிலிருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினர், குற்றாலத்தில் குளிக்க சென்றவர்கள் திமுகவினரை வெறுப்பேற்றும் விதமாக கோஷமிட்டதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள கார் சேதத்தை தாங்களே சரி செய்துக்கொள்வாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல இந்த சம்பவம் குறித்து புகார் ஏதும் கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.