சான்பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் பழைய போனில் இருந்து புதிய போனுக்கு சாட்களை எளிதில் மாற்றும் வகையில் புதிய அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகமாகி உள்ளது. இது பயனர்களுக்கு பெரிதும் உதவும் என தெரிகிறது. மெசேஜ், மீடியா உட்பட அனைத்தையும் இதன் மூலம் பயனர்கள் மாற்றிக் கொள்ளலாம்.
வாட்ஸ்அப் மெசேன்ஜரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த புதிய அம்சம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வாட்ஸ்அப் அதிகாரபூர்வமாக தகவலை பகிர்ந்துள்ளது. இப்போதைக்கு இந்த அம்சம் ஒரே இயங்குதளம் கொண்ட போன்களில் மட்டுமே செயல்படும். அதாவது பழைய மற்றும் புதிய போன்கள் ஆண்ட்ராய்டு டு ஆண்ட்ராய்டு அல்லது ஆப்பிள் ஐஓஎஸ் டு ஆப்பிள் ஐஓஎஸ் என ஒரே இயங்குதளத்தை கொண்டிருக்க வேண்டும். இதன் மூலம் பயனர்கள் கிளவுட் பேக்அப் சேவையை சார்ந்திருக்க வேண்டி இருக்காது.
பயனர்கள் தங்கள் சாட்களை மாற்றும் போது இதன் மூலம் பிரைவசிக்கு உத்தரவாதம் கிடைக்கும் என மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
பழைய போனிலிருந்து புதிய போனுக்கு சாட்களை மாற்றுவது எப்படி? – இரண்டு போன்களையும் பயனர்கள் தங்கள் வசம் கொண்டிருக்க வேண்டும். Wi-Fi இணைப்பில் இரண்டு போன்களும் இணைக்கப்பட்டு இருப்பதோடு, லொக்கேஷன் எனேபிள் செய்யதுள்ளதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- பழைய போனில் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியில் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்.
- அதில் ‘சாட்ஸ்’ ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அதனுள் டிரான்ஸ்ஃபர் சாட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- தொடர்ந்து க்யூஆர் கோடு வரும்.
- புதிய போனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்து, அதே போன் எண்ணை கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
- பின்னர் பழைய போனில் உள்ள க்யூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும்.
- அல்லது பேக்-அப் ஆப்ஷன் மூலமாகவும் இதை ஸ்கேன் செய்ய முடியும்.
- இதன் மூலம் பயனர்கள் தங்கள் சாட்களை பழைய போனில் இருந்து மாற்றிக் கொள்ளலாம்.