புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மாநிலத்தில் வன்முறையைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
குகி பழங்குடியினருக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கவேண்டும் என தொண்டு நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த மனு உட்பட மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 3) விசாரணைக்கு வந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கினை விசாரணை செய்தது.
அப்போது, மணிப்பூரில் நிலவும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், வன்முறையால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மறுவாழ்வு நடவடிக்கைகள், நிலைநிறுத்தப்பட்டுள்ள படைகளின் விவரங்கள், மணிப்பூரின் தற்போதைய சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து மாநில அரசு ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது.
வழக்கில் மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். அப்போது அவர், “மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகிறது. அங்கு மாநில போலீஸ் தவிர மணிப்பூர் ரைபில்ஸ், மத்திய ஆயுதப் படைகள், ராணுவத்தின் 114-வது பிரிவு மற்றும் மணிப்பூர் கமாண்டோ படைகள் மட்டுமே பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் 24 மணி நேரமாக இருந்த ஊரடங்கு 5 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
குகி குழுக்களின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சல்வ்ஸ், இந்த வழக்குக்கு வகுப்புவாத கோணம் வழங்கப்படக் கூடாது என்றும், குகிகளுக்கு எதிரான வன்முறைக்கு அரசு ஆதரவளித்தது என்றும் கூறினார்.
முன்னதாக, ஜூன் 20-ம் தேதி டெல்லியில் உள்ள மணிப்பூர் பழங்குடினர் அமைப்பு, உச்ச நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த் மற்றும் எம்எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சல்வ்ஸ், “உச்ச நீதிமன்றத்தில் மணிப்பூர் அரசு உத்தரவாதம் அளித்திருக்கும் போதிலும், மாநிலத்தில் கொலைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. மாநில அரசின் வெற்று உத்தரவாதங்களை நம்ப வேண்டாம். மணிப்பூரில் உள்ள குகி பழங்குடியினரைக் காப்பாற்ற ராணுவத்தை அனுப்ப உத்தரவிடவேண்டும். இந்த மனுவினை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
மணிப்பூர் மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார் மேலும், “மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் ஏற்கனவே களத்தில் உள்ளனர். அவர்கள் தங்களால் முடிந்தவைகளை சிறப்பாக செய்துகொண்டு இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிபதிகள் “இது முற்றிலும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை சார்ந்தது. மாநிலத்திற்கு ராணுவத்தினை அனுப்பும்படி நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டிய அவசிமில்லை என்று நாங்கள் நம்புகிறோம் எனக் கூறி வழக்கினை ஜூலை 3-ம் தேதிக்கு பட்டியலிட்டனர்.
பின்னணி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 53 சதவீதம் இருக்குமு் மைத்தி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் (எஸ்டி) சேர்க்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு, பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குகி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மைத்தி சமூக மக்களை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும்மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.