மயிலாடுதுறை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மதிமுகவில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக இருக்கும் மார்கோனி ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியான நிலையில், அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மதிமுகவில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளராக இருப்பவர் மார்கோனி. தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை இவர் ரகசியமாக சந்தித்ததாகவும் அதிமுகவில் சேர இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில், அவரை கட்சி பதவியை அதிரடியாக பறித்து வைகோ நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
” மயிலாடுதுறை மதிமுக மாவட்ட செயலாளராக இருக்கும் மார்கோனி கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மார்க்கோனியின் மாவட்ட செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டு இருப்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. மதிமுகவினர் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்கோனி பதவி பறிப்பு தொடர்பாக கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில், ” மார்கோனியின் தாயார் சீர்காழி நகராட்சி உறுப்பினராக இருக்கிறாராம். சீர்காழி நகராட்சி தலைவர் பதவி திமுக வசம் உள்ள நிலையில், நகராட்சியில் உள்ள மொத்த கவுன்சிலர் எண்ணிக்கையில் அதிமுக சேர்ந்தவர்கள் 5 பேரும் ஏனைய கவுன்சிலர்கள் மார்கோனியின் தாயார் ஆதரவாளர்களாக உள்ளார்களாம்.
எனவே, அதிமுக கவுன்சிலர்கள் உதவியுடன் தனது தாயாரை நகராட்சி தலைவராக்க மார்கோனி எண்ணியுள்ளார். இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மார்கோனி ரகசியமாக சந்தித்தாராம். அதிமுகவில் இணையவும் மார்கோனி திட்டமிட்டு இருந்தாராம். இந்த தகவல் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காதுக்கு போய் உள்ளது. இதனால், டென்ஷன் ஆன வைகோ, மார்கோனியை கட்சி பதவியில் இருந்து தூக்க முடிவு செய்துள்ளார்.
தற்போது, அதிமுகவுடன் இணைந்து கொண்டு சீர்காழி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற மார்கோனி தாயார் திட்டமிட்டுள்ள நிலையில், தலைவர் பதவியை தக்க வைக்க திமுக ஆலோசித்து வருகிறது. அதிமுகவும் முட்டி மோதும் என்பதால் சீர்காழி நகராட்சியில் கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.