தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் தனுஷ் கையில் வைத்திருக்கும் துப்பாக்கி பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
`சாணி காயிதம்’ அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் `கேப்டன் மில்லர்’. இந்தப் படத்தில் தனுஷுடன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன் என நிறைய பேர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சென்னை, குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. கலை இயக்குநர் இராமலிங்கம் கைவண்ணத்தில் பீரியட் காலகட்டத்திற்கான அரங்கங்கள் அமைத்து, படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இம்மாதம் 28ம் தேதி தனுஷின் பிறந்தநாள் வருகிறது. அன்று, படத்தின் டீசரை வெளியிட உள்ளனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் தனுஷின் கையில் உள்ள துப்பாக்கி பலரின் புருவத்தையும் உயர்த்த வைத்திருக்கிறது.
இது குறித்து கேப்டன் மில்லர் படத்தின் கலை இயக்குநரான இராமலிங்கத்திடம் பேசினேன். இதற்கு முன், ‘காலா’, ‘சார்பட்டா பரம்பரை’ என கவனம் ஈர்த்த கலை இயக்குநர் இவர்.
“தனுஷ் சாரின் ‘கேப்படன் மில்லர்’ படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் ஆர்ட் டிபார்ட்மென்ட்களின் கைவண்ணன் இருக்கும். இது 1930-களில் நடக்கும் கதை எனபதால், அந்தக் காலகட்டத்திற்கான விஷயங்களை பண்ணினது பெரும் சவாலான அனுபவம்தான். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் சாரின் கையில் இருப்பது லெவிஸ் கன். இது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி .இதுமட்டுமல்ல படத்தில் இடம்பெறும் சின்னச் சின்ன விஷயத்திற்குமே பெரிய அளவுல ரெபரன்ஸ் எடுத்து உழைச்சிருக்கோம். படம் வரும் போது உங்களுக்கும் இந்த உணர்வு ஏற்படும்.
வழக்கமா படங்களில் துப்பாக்கிகள் இடம்பெறும் போது அதை டம்மி கன் பண்றவங்ககிட்டத்தான் ரெடி பண்ணச் சொல்வாங்க. ஆனா, அப்படி ரெடி பண்ணினது சரியா வராமல் போனதால், நானே என் டீமை வைத்து ரெடி பண்ணியிருக்கேன். இந்த துப்பாக்கியை மெட்டல், ஃபைபர் கொண்டு உருவாக்கினோம். அதில் வைக்கும் புல்லட் கூட மெட்டல்தான். இந்தத் துப்பாக்கி, லைவ்வா இயக்கவும் முடியும். இந்த கன் ஒரு சின்ன சாம்பிள் தான். படத்தில் இதைப் போல ஆச்சரியங்கள் நிறையவே காத்திருக்கு. அதையெல்லாம் படம் வந்த பிறகுதான் விரிவா பேச முடியும்” என்கிறார் இராமலிங்கம்.