சிறு வயது நினைவுகள் மறக்க முடியாதவை. உடன்பிறந்தவர்கள் இருந்தால், அவர்களுடன் போட்ட சண்டைகள், சமாதானங்கள் என பல நினைவுகள் அடிக்கடி நினைவுக்கு வந்துவிடும்.
இப்படி நம்முடைய சிறு வயது கோபதாபங்களை, சண்டைகளை நினைவுபடுத்தும் வகையில், சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
பெரும்பாலும் சகோதரர் மற்றும் சகோதரிக்குள் சண்டை வந்து கொண்டே இருக்கும். அந்தச் சண்டை பெற்றோர்கள் வாங்கும் துணியில் இருந்து, தின்பண்டங்கள் வரை நீண்டு கொண்டே செல்லும்.
இன்னும் சில நேரங்களில் வாங்கி வரும் பண்டங்களை யாருக்கும் தெரியாமல் தம்பி, தங்கைக்கும் கொடுக்காமல் அமைதியாகத் தின்றுவிட்டு ஓடிவிடும் அண்ணன்களும் உண்டு. அவர்களை அழ வைத்துப் பார்ப்பதில் என்ன ஒரு ஆனந்தம் எனத் தோன்றும்.
இப்படி அண்ணன் தன்னுடைய ஃப்ரூட் ஸ்நாக்ஸை சாப்பிட்டு விட்டதால், தம்பி ஒருவர் எழுதிய ஒற்றை வரி, அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்த ட்விட்டர் பதிவில், `என்னுடைய சிறிய தம்பியின் ஃப்ரூட் ஸ்நாக்ஸை சாப்பிட்டுவிட்டு வீடு வந்தபோது இது கிடைத்தது’ என்று ஒரு Ben 10 கார்டை புகைப்படம் எடுத்துப் பதிவிட்டுள்ளார்.
அந்த கார்டில் `How could You’ என்ற ஆற்றாமை வரிகளோடு, சில கண்ணீர்த் துளிகளும் இடம் பெற்றிருக்கின்றன. இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்களது பால்ய கால நினைவுகள் குறித்து கமென்ட் செய்து வருகின்றனர்.