சென்னை: Keerthy Suresh (கீர்த்தி சுரேஷ்) மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கீர்த்தி சுரேஷை கமல் ஹாசன் பயங்கரமாக பாராட்டிய சூழலில் அதற்கான காரணம் வெளியாகியிருக்கிறது.
ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையு ஒரு சேர இருந்த கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் குவிந்தன. மேலும் தமிழும் சரளமாக பேச தெரிந்த நடிகை என்பதால் அவரை புக் செய்வதற்கு பல தமிழ் இயக்குநர்கள் விரும்பினர். அந்தவகையில் விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுஷுடன் தொடரி, ரஜினியுடன் அண்ணாத்த என பல படங்களில் நடித்தார்.
சறுக்கிய கீர்த்தி: கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தாலும் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. இதன் காரணமாக கீர்த்தி சுரேஷ் ராசியில்லாத நடிகை என்ற பெயரை பெற்றார். ஆனால் சினிமாவுக்கு ராசியைவிட திறமை கொஞ்சம் முக்கியம் என்பதால் தமிழில் அவருக்கு இறங்கு முகமாக இருந்தாலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏறுமுகமே கிடைத்தது.
தேசிய விருது: அதன்படி நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். படத்தை பார்த்த அனைவருமே வாயடைத்துப்போனார்கள். அதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் கீர்த்தி சுரேஷ். படம் மெகா ஹிட்டாகி கீர்த்திக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது மட்டுமின்றி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
மாமன்னன் கீர்த்தி சுரேஷ்: தமிழ் பக்கம் பெரிதாக தலைகாட்டாமல் இருந்த அவர் சமீபத்தில் மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியானது. லீலாவதி என்ற கம்யூனிஸ்ட் கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருந்தார். இருந்தாலும் வடிவேலு, ஃபகத் பாசில் என்ற மகா நடிகர்களின் பெர்பார்மன்ஸுக்கு மத்தியில் கீர்த்தியின் நடிப்பு கவனிக்கப்படாமல் போனது.
பாராட்டிய கமல்: இதற்கிடையே மாமன்னன் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் கமல் ஹாசன். அப்போது கீர்த்தி சுரேஷ் குறித்து பேசிய கமல், “கீர்த்தி சுரேஷ் புத்திசாலியான பெண். அழகு மட்டும் இருக்கக்கூடாது. அழகோடு அறிவும் இருக்க வேண்டும். அது நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வாய்த்திருக்கிறது” என்றார். கமலின் இந்தப் பாராட்டு பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
காரணம் என்ன?: கமலிடமிருந்தே இப்படி ஒரு பாராட்டு வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் பேசியபோது, “கீர்த்தி சுரேஷ் இயல்பாகவே கவிஞர். மலையாளத்தில் சில கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.அவர் எழுதிய கவிதை பல பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. எழுத்து மட்டுமின்றி சிறுகதைகளும் படிப்பார். ஜெயலலிதா போல் படத்தின் ஷாட்டுக்கு இடையில் புத்தகங்கள் படிப்பார். இதையெல்லாம் தெரிந்துதான் கமல் ஹாசன் பாராட்டியிருப்பார்” என்றார்.