சென்னை: மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் சூப்பர்ஸ்டார் ரஜினி குறித்து பேசிய பேச்சுக்கு ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படம் வரும் ஜூலை 14ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மேலும், வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார். சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர் இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
சூப்பர்ஸ்டார் சர்ச்சை: வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் நடிகர் விஜய்யை சூப்பர்ஸ்டார் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், மாவீரன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியிலும் மீண்டும் அடுத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சை வெடித்துள்ளது.
இயக்குநர் மிஷ்கின் அந்த விழாவில் பேசிய போது சிவகார்த்திகேயன் அப்படியே குட்டி ரஜினி போல இருக்கிறார் என பேசி பரபரப்பை பற்ற வைத்திருந்தார். இந்நிலையில், அதற்கு அந்த விழாவிலேயே சிவகார்த்திகேயன் அளித்த பதிலைத் தான் தற்போது ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.
நான் ரஜினி கிடையாது: மாவீரன் ப்ரீ ரிலீஸ் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஆட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய சிவகார்த்திகேயன், “நான் ரஜினி சார் அளவிற்கு இல்லை. அவர் பெரிய லெவல். நான் நானாகவே இருப்பேன்” என சிவகார்த்திகேயன் பேசி ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க செய்யாமல் அவர்களின் ஆதரவை பெற்றுள்ளார்.
இந்நிலையில், அப்படி எப்படி சும்மா விடுறது என சிவகார்த்திகேயனை அவர் சொன்ன வார்த்தைகளை வைத்தே சீண்டியுள்ளார் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.
சிவகார்த்திகேயனை சீண்டிய ப்ளூ சட்டை: “நான் ரஜினி சார் அளவிற்கு இல்லை. அவர் பெரிய லெவல். நான் நானாகவே இருப்பேன் – மாவீரன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்தி தன்னடக்க பேச்சு. நான் நானாகவே இருப்பேன். ஆனா டைட்டில் மட்டும்…
கேடி பில்லா கில்லாடி ரங்கா, வேலைக்காரன், ரஜினிமுருகன், மாவீரன்.” என பட டைட்டில்களை மட்டும் ஏன் ரஜினி படங்களின் பெயர்களையும் அடுத்த ரஜினி நான் தான் என்கிற சிக்னலையும் கொடுப்பது போல வைக்கிறீங்க என கேள்வி எழுப்பி உள்ளார்.
ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட் சிவகார்த்திகேயன் ரசிகர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. கமெண்ட் பக்கத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர். சிலர், இதுவொரு நல்ல கேள்வி என்றும் ரஜினிக்குப் பிறகு பல நடிகர்கள் ரஜினியாகவே முயற்சி செய்து வருகின்றனர் என்றும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.