காபூல்: ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்துவதற்கு தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஆப்கானிஸ்தானில் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், “காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்களும் உடனடியாக தடை செய்யப்படுகிறது. அனைவரும் எங்கள் உத்தரவைப் பின்பற்ற வேண்டும். இந்த உத்தர்வை மீறுபவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெண்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் செவிலியர்களாகவும், மருத்துவர்களாகவும் பணிபுரிய மட்டுமே ஆப்கானிஸ்தானில் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு பெண்களுக்கு எதிரான இந்த அடக்குமுறைகளை தலிபான்கள் தொடர்ந்தால் சர்வதேச சமூகம் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிப்பது “கிட்டத்தட்ட சாத்தியமற்றது” என்று ஐ.நா சபை தெரிவித்திருந்தும் அழகு நிலையம் தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்த உத்தரவு குறித்து ஆப்கானிஸ்தானில் இயங்கும் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் ஜமிலா கூறும்போது, “தலிபான்கள் பெண்களை மனிதர்களாகக் கருதவில்லை. ஒடுக்கும் பொருளாக கருதுகின்றனர். இந்த உத்தரவினால் ஆயிரக்கணக்கான ஒப்பனைக் கலைஞர்களை பாதிக்கப்படுவர். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அழகு நிலையக் கடைகளை மூடப்படும்” என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், அவர்களின் அறிவிப்புக்கு மாறாக தலிபான் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் பெண்கள் பணிக்குச் செல்ல அனுமதி மறுத்தனர். சிறுமிகள் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்வது தடை விதித்தது. பல்கலைக் கழகங்களிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.