நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற 3ஆவதும், கடைசியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் கிரிகெட் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதற்கமைய சிறப்பான துடுப்பாட்டத்தை அவ் அணி வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போதே நண்பகல் 12.00 மணியளவில் குறிப்பிட்ட போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. இதன்போது நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 127 ஆக காணப்பட்டது. எவ்வாறாயினும் தொடர்ந்து 3 மணித்தியாலங்கள் போட்டி மழையால் தடைப்பட்டதால் இலங்கை அணிக்கு 29 ஓவர்களில் 196 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நியூசிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 196 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 26.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
இலங்கை அணி தலைவி சாமரி அத்தபத்து 80 பந்துகளுக்கு 13 பௌண்டரிகள் 9 சிக்ஸர்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 140 ஓட்டங்களைக் பெற்றது இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
இதேவேளை இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதலாவது ரி20 போட்டி எதிர்வரும் ஜுலை 8ஆம் திகதி கொழும்பு பி. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.