ஈரோடு: திருமணத்துக்காக உதவி ஆய்வாளர் வேடம்; வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட இளைஞர் சிக்கியது எப்படி?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சங்கு நகரைச் சேர்ந்தவர் சதாம் உசேன் (27). இவர் திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் விஜயமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த இடத்தில் காவல் உதவி ஆய்வாளர் போல் உடை அணிந்து நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சதாம் உசேனை நிறுத்தியிருக்கிறார். பின்னர் அவரிடம், நான் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் காவல் உதவி ஆய்வாளர் என்றும், உனது வாகனத்தின் ஆர்.சி. புக் மற்றும் ஓட்டுநர் உரிமத்தைக் கேட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து சதாம் உசேன் அந்த நபரிடம் ஆவணங்களை காண்பித்திருக்கிறார். இருப்பினும், அந்த நபர், “எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ரூ.500 கொடுத்துவிட்டு போ” என்று கூறியிருக்கிறார். தன்னிடம் பணம் இல்லை சதாம் உசேன் தெரிவித்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர் சதாம் உசேனிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்.

இதையடுத்து, சதாம் உசேன், விஜயமங்கலத்திலுள்ள தனது நண்பரான சிவா என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவரிடம் நடந்த விவரங்களை தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்ட சிவா, `இதே போல்தான் கடந்த வாரம் சிறுவலூர் பகுதியில் ஒருவர், என்னிடம் பேசி பணம் கேட்டார். நான் அவருக்கு பணம் கொடுக்காமல் வந்துவிட்டேன். அதே நபர்தான், இப்போது உன்னையும் மிரட்டுவதாகத் தெரிகிறது. அந்த நபருக்கு பணம் எதுவும் கொடுக்காதே’ என்று கூறியிருக்கிறார்.

தேவராஜ்

நண்பர் சொன்னதைக் கேட்ட சதாம் உசேன் அங்கிருந்து கிளம்பி, பெருந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் பெருந்துறை போலீஸார் விஜயமங்கலம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஊத்துக்குளி ரோடு, மேம்பாலத்துக்கு கீழே, காவல் உதவி ஆய்வாளர் வேடத்தில் வாகனங்களை ஆய்வு செய்துகொண்டிருந்த இளைஞரப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், விசாரணையில் அந்த நபர் விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூரைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடைய மகன் தேவராஜ் (29) என்பதும், 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

மேலும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த தேவராஜ், அதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க காவல் உதவி ஆய்வாளர்போல் வேடம் போட்டு, பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, போலீஸார் அவர் மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.