அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் ஆகியோர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்தவர்கள் தஸ்தகீர்- அஜிஷா தம்பதியினர். இவர்களின் ஒன்றரை வயது குழந்தை முகம்மது மகீர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தவறான சிகிச்சையால் குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தைக்கு கை அகற்றப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு கிடையாது. திமுக அரசின் அலட்சியத்தால் ஒரு குழந்தையின் கை பறிபோகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளின் லட்சணம் இதுதான். சளிக்கு வந்தவர்களுக்கு நாய்க்கடி ஊசி போடப்படுகிறது. அதிமுக ஆட்சியில் தமிழக சுகாதாரத்துறை நாட்டிலேயே முதன்மையான இடத்தில் இருந்தது. ஓடலாம் வாங்க என மராத்தானில் தான் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனம் செலுத்திவருகிறார்.
காலாவதியான மருந்து வாங்கி உட்கொண்ட சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இளம் கால்பந்து வீராங்கனையின் உயிர் பறிபோனது. இதேபோல் தலைமை காவலர் ஒருவரின் பெண் குழந்தைக்கு தவறான சிகிச்சையால் கால் பறிபோனது. மகளுக்கு தவறான சிகிச்சை செய்ததை கண்டித்து தலைமைக் காவலரே தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தினார்.
குழந்தையை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. குழந்தையின் எதிர்காலம் கருதி திமுக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறினார்.