இந்தூர்: மத்திய பிரதேசத்தில் மதுபோதையில் பழங்குடியின தொழிலாளி மீது ஒருவர் சிறு நீர் கழிக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட நபர் பாஜக எம்.எல்.ஏவின் பிரநிதி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், அதை பாஜக மறுத்துள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் நெஞ்சை உறைய வைக்கும் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. மது போதையில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி மீது ப்ரவேஷ் சுக்லா என்பவர் சிறு நீர் கழித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி காண்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த கொடூர சம்பவத்தின் விவரம் வருமாறு:-
மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் குப்ரி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தொழிலாளியாக பணியாற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த நபர் ஒருவர் மீது பர்வேஷ் சுக்லா என்பர் சிறு நீர் கழித்துள்ளார். பழங்குடியின நபர் அமர்ந்து இருக்க அவர் முகத்தில் சிறுநீரை கழித்து பெரும் கொடூர செயலில் பர்வேஷ் சுக்லா ஈடுபட்டுள்ளார். ஒரு கையில் சிகெரெட்டை வைத்தபடி மது போதையில் இந்த படு பாதக செயலில் ஈடுபட்டு இருக்கிறார்.
இவர் சிதி பாஜக எம்.எல்.ஏவான கேதர்நாத் சுக்லாவின் பிரதிநிதி என்று சொல்லப்படுகிறது. அரசியல் பின்புலம் இருப்பதால் இவருக்கு எதிராக புகார் கொடுக்கவும் பயந்து போயிருந்தார்களாம். கடந்த 6 தினங்களுக்கு முன்பே இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் தற்போது வீடியோ காட்சிகள் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பதிவு செய்துள்ளார்.
அந்த நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் உத்தர்விட்டுள்ளார். இதனிடையே, இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் மோதலுக்கு வித்திட்டுள்ளது. இந்த பிரச்சினையை கையில் எடுத்த காங்கிரஸ் மத்திய பிரதேசத்தில் பழங்குடியின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு இதுதான் சான்று என குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல், குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் பர்வேஷ் சுக்லா பாஜக எம்.எல்.ஏவின் பிரதிநிதி என்றும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
எனினும், இதை திட்டவட்டமாக மறுத்துள்ள பாஜக, பர்வேஷ் சுக்லாவிற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், இது போன்ற கொடூர செயல்களை பாஜக எப்போதும் ஆதரிக்காது” என்றும் விளக்கம் அளித்துள்ளது. பழங்குடியின நபர் மீது மதுபோதையில் ஒருவர் சிறு நீர் கழித்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை மத்திய பிரதேசத்தில் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட நபர் அபிடவிட் வெளியாகியுள்ளது.
அதில், ஆதர்ஷ் சுக்லா மற்றும் அவரது ஆதரவாளர்களால் பரப்பப்படும் வீடியோ போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பழங்குடியின தொழிலாளியை கட்டாயப்படுத்தி இந்த கடிதத்தை எழுத வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து சிதி போலீசார், பர்வேஷ் சுக்லா மீது இந்திய தண்டனை சட்டம் 294, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.