காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையிலான செயல்களில் தாலிபான்கள் ஈடுபட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி, பூங்கா, ஜிம் செல்ல தடையுடன் கூடிய பல கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்துள்ள தாலிபான்கள் பெண்களின் அழகு நிலையங்கள் தொடர்பாகவும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளிறேியதை தொடர்ந்து தாலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். கடந்த 2021ம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் மதத்தின் பெயரில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனால் பெண்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சூழலில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் பள்ளி, கல்லூரி, ஜிம், பூங்கா செல்லவும், என்ஜிஓக்களில் பணி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இருப்பினும் தாலிபான்கள் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. மாறாக தொடர்ந்து பல்வேறு விஷயங்களுக்கு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர். அந்த வகையில் தான் தற்போது தாலிபான்களின் கண்களை அழகு நிலையங்கள் உறுத்தி உள்ளன. இதனால் தான் தற்போது அழகு நிலையங்கள் தொடர்பான புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
அதாவது தலைநகர் காபூல் மற்றும் நாட்டில் உள்ள மற்ற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு (பியூட்டி பார்லர்) தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் அழகு நிலையங்களுக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காபூல் நகராட்சிக்கான நல்லொழுக்க அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமது அகீப் மகாஜர் கூறுகையில், ‛‛தாலிபான் அரசின் புதிய உத்தரவை அனைவரும் நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது வறுமை பிரச்சனை உள்ளது. ஏராளமானவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் பல பெண்கள் அழகு நிலையத்தில் பணி செய்து வந்தனர். தற்போதைய உத்தரவால் அவர்கள் பணியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மிகவும் மனவருத்தத்துக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுபற்றி பெண் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ரெய்கான் முபாரிஸ் கூறுகையில், ‛‛ஆண்கள் வேலையின்றி உள்ளனர். இதனால் அவர்களால் குடும்பத்தை பார்க்க முடியாத சூழல் உள்ளது. இத்தகைய நிலை தான் எங்களை வேலைக்கு செல்ல தள்ளியது. இதனால் தான் எங்களின் பசியை போக்க அழகு நிலையங்களில் பணியாற்ற தொடங்கினோம். இப்போது இதற்கும் தடை விதித்தால் நாங்கள் என்ன செய்வது?” என மனவருத்தத்துடன் கூறியுள்ளார்.
இன்னொருவர் கூறும்போது, ‛‛ஆண்கள் வேலைக்கு சென்றால் நாங்கள் வீட்டில் இருந்து ஒருபோதும் வெளியே வரமாட்டோம். ஆனால் இங்கு நிலைமை வேறுமாதிரியாக உள்ளது. தற்போது எங்களின் பணிக்கும் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இதனால் இனி எங்களால் என்ன செய்ய முடியும்? பட்டினி கிடந்து சாக வேண்டியது தான்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.