தெய்வத்துக்கு நிகரானவர்கள் தீட்சிதர்கள்.. மனசாட்சிபடி நடக்க வேண்டும்.. உருக்கமாக பேசிய சேகர்பாபு

சென்னை:
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மனசாட்சிபடி நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார். இந்தக் கோயில் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோயில் தீட்சிதர்கள் சந்தித்து பேசியதை அடுத்து சேகர் பாபு இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்தது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அங்குள்ள தீட்சிதர்கள் தனியாக பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய தமிழக அரசு, எந்தவித கட்டணமும் செலுத்தாமல் கனகசபை மீது பொதுமக்கள் ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என கடந்த மே மாதம் அரசாணை வெளியிட்டது.

இந்த சூழலில், கடந்த வாரம் கோயில் கனகசபை மீது பொதுமக்கள் ஏறுவதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, சிதம்பரம் கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர தமிழக அறநிலையத்துறை முயன்று வருகிறது.

இதற்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தீட்சிதர்கள் திடீரென நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

சிதம்பரம் நடராஜர் கோயில் மன்னர்களால் கட்டப்பட்டது. அங்கு வரும் பக்தர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் சமுகமான உறவு இருக்க வேண்டும். கணக்கு வழக்கு சரியாக இருக்க வேண்டும். அந்தக் கோயில் வரவு செலவு கணக்கை சரிபார்க்கும் உரிமை அறநிலையத்துறைக்கு இருக்கிறது. சட்டமீறல் இருந்தால் அதை கேட்கின்ற அதிகாரம் எங்களுக்கு இருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில்தான் சிதம்பரம் கோயில் கனகசபை விவகாரத்தில் நாங்கள் அரசாணை பிறப்பித்தோம். எனவே, தீட்சிதர்கள் நியாயமாகவும், மனசாட்சிபடியும் நடந்துகொள்ள வேண்டும். தெய்வத்துக்கு நிகரான தீட்சிதர்களே, பக்தர்களுக்கு தீங்கு விளைவிக்கும் போதுதான் நாங்கள் அதுகுறித்து கேட்கிறோம். இவ்வாறு சேகர் பாபு கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.