பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் நடித்து வெளி வந்த கிஷி கா பாய் கிஷி கி ஜான் என்ற படம் சரியாக வசூலைக் கொடுக்கவில்லை.
சல்மான் கானே சொந்தமாக இப்படத்தை தயாரித்து பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தார். இதையடுத்து சல்மான் கான் படத்தில் நடிக்கும் விவகாரத்தில் புதிய முடிவை எடுத்துள்ளார். அதன் படி இனிமேல் நண்பர்கள், திரைப்படத்துறையில் கஷ்டப்படுபவர்கள் மற்றும் குடும்பத்திற்காக படம் எடுக்கவோ அல்லது நடிப்பதோ இல்லை என்று முடிவு செய்துள்ளார்.
குறிப்பாக சொந்தத் தயாரிப்பில், சகோதரர்களின் இயக்கத்தில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார். தற்போது சல்மான் கான் சரியான கதையை தேடிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக இதற்கு முன்பு சல்மான் கான் செய்யாத ஒரு கதாபாத்திரமாக இருக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் சேர்ந்து இன்ஷால்லாஹ் படத்தில் நடித்த போது படப்பிடிப்பில் இருந்து சல்மான் கான் வெளியேறிவிட்டார். இப்படம் பாதியில் நிற்கிறது. இப்படத்தின் கதை வித்தியாசமானது. எனவே இப்படத்தைத் தூசு தட்டி எடுக்க சல்மான் கான் முடிவு செய்திருக்கிறார். இதற்காக சல்மான் கான் சஞ்சய் லீலா பன்சாலியை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். எனவே மீண்டும் இப்படம் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் சல்மான் கானுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக இன்ஷால்லாஹ் கைவிடப்படுவதாக டிசைனர் ரூபின் குறிப்பிட்டு இருந்தார்.
விரைவில் சல்மான் கான் நடிப்பில் டைகர் 3 படம் திரைக்கு வர இருக்கிறது