நிதீஷ் குமார் கட்சியை உடைக்க பிளான்: ஆமா நாங்க தான்.. சொல்லி அடிக்கும் பாஜக!

உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இரண்டாக உடைத்த பாஜக நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக ஆட்சியைப் பிடித்து பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து கடந்த 9 ஆண்டுகளில் பாஜக பல்வேறு மாநிலங்களில் கால் ஊண்றியுள்ளது. கூட்டணிக் கட்சிகள், எதிர்கட்சிகள் என்ற பாரபட்சம் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செல்வாக்கு உள்ள நபர்கள் என பலதரப்பட்டவர்களை தங்கள் கட்சிக்கு கொண்டு வந்து கட்சியை வளர்த்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் மாநிலங்களில் வலுவானதாக இருக்கும் கட்சிகளை இரண்டாக, மூன்றாக உடைக்கும் வேலைகளில் கூட பாஜக ஈடுபடுவதாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

நிலைமை இப்படி இருக்க பாஜகவுக்கே தண்ணி காட்ட நினைத்தவர்களை சும்மா விடுவார்களா? மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா இணைந்து தேர்தலை சந்தித்தாலும் முதல்வர் பதவியில் யார் அமர்வது என்ற பஞ்சாயத்தில் சிவசேனா கூட்டணியிலிருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தது.

அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கைப்பற்றியிருந்த போதும் ஆட்சி செய்யும் வாய்ப்பு பறி போனநிலையில் சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.

இந்த சூழலில் அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்துள்ளது. அவரும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வர் பதவியை பெற்றுக்கொண்டார்.

மகாராஷ்டிராவை போல் பீகாரிலும் பாஜகவுக்கு கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் துணையுடன் ஆட்சி நடத்தி வருகிறார் நிதீஷ் குமார்.

இதனால் மகாராஷ்டிராவை தொடர்ந்து பீகார் அரசியலிலும் திருப்பங்களை நிகழ்த்த பாஜக தயாராகிவருகிறது. பீகாரில் 40 எம்பி தொகுதிகள் உள்ளன. இங்கு எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்தி விட்டால் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பாஜக கணக்குபோட்டு செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

பீகாரில் நிதிஷ்கட்சியை உடைப்பதை பீகார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக எம்பியுமான சுஷில்குமார் மோடி நேற்று உறுதிப்படுத்தினார்.

இதுபற்றி அவர், “நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இப்போது கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியில் உள்ள பலர் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். அந்த கட்சியை சேர்ந்த பல எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து எங்களுடன் வருவார்கள்.

இவர்கள் அனைவரும் நிதிஷ்குமாரின் வாரிசாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவரும், துணைமுதல்வருமான தேஜஸ்வியை ஏற்கவில்லை. மேலும் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவராக ராகுல்காந்தியை ஏற்கவில்லை. மகாராஷ்டிரா போன்று பீகாரிலும் அரசியல் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்றால், வரும் நாட்களில் எதுவும் நடக்கலாம். நிதிஷ்கட்சியில் எதுவும் நடக்காது என்று யாரும் உத்தரவாதம் அளிக்க முடியாது” என்று கூறினார்.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலையில் நிதீஷ்குமார் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது கட்சியை உடைத்து அவரை அமைதியாக்கும் முயற்சிகள் நடைபெற்றுவருவதாக சொல்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.