பாட்னா: “மகாராஷ்டிராவில் தேசியவாத கட்சியின் அஜித் பவாரின் கிளர்ச்சியால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது போன்ற நிலை பிஹாரிலும் நடக்கலாம்” என்று சுஷில் குமார் மோடி கணித்துள்ளார்.
பிஹார் முன்னாள் துணை முதல்வரும், பாஜக தலைவருமான சுஷில் குமார் மோடி கூறுகையில், “ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பல்வேறு எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தொடர்ந்து பாஜகவுடன் பேசி வருகின்றனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிளவினை எதிர்கொள்ளும் நிலையில் நிலையில் உள்ளது. வரும் நாட்களில் எதுவும் நடக்கலாம். ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து வரும் கிளர்ச்சியாளர்களை ஏற்றுக்கொள்வது குறித்து பாஜக இன்னும் முடிவு செய்யவில்லை. பல்வேறு காரணிகளைப் பொறுத்து அந்த முடிவு இருக்கும்.
நிதிஷ் குமார் பாஜகவின் முதுகில் குத்தியதை அக்கட்சியினர் விரும்பவில்லை. தேஜஸ்வி யாதவை தனது வாரிசாக நிதிஷ் அறிவித்ததைத் தொடர்ந்து த கட்சியின் எதிர்காலம் இருளில் இருப்பதாக உணர்கின்றனர். அடுத்த தேர்தலில் அவர்களுக்கு இடம் கிடைக்காது என்று அவர்களுக்குத் தெரியும்.
கடந்த முறை ஜக்கிய ஜனதா தளத்துக்கு 17 இடங்கள் கிடைத்தன. இன்றைய சூழ்நிலையில் அக்கட்சி 8-ல் இருந்து 10-க்கு மேல் கிடைக்கப் போவதில்லை. அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தங்களின் எதிர்காலம் இருளில் இருப்பதாகவே உணர்கிறார்கள். அங்கு ஒரு நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. எம்.பி, எம்எல்ஏக்கள் மற்ற கட்சியினருடன் தொடர்ந்து பேசி வருகின்றனர். அங்கு ஒரு கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ளது.
அஜித் பவாரின் மிகப் பெரிய கிளர்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள் மாற்றுக் கட்சிக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக பிஹார் முதல்வர், அவர்களைத் தனித்தனியாக சந்தித்து வருகிறார். ஆனால், பாஜகவின் கதவுகள் நிதிஷ் குமாருக்காக ஒருபோதும் இனி திறக்கப்படாது” என்று அவர் தெரிவித்தார்.
ஜேடியு பதிலடி: “இது எல்லாம் பாஜகவின் பிரச்சாரம். சுஷில் குமார் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழட்டும். ஐக்கிய ஜனதா தளம் கட்சி அப்படியே உள்ளது” என்று நிதிஷ் குமாரின் நெருங்கிய உதவியாளரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான லாலன் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவிடம் தஞ்சம் புகுந்தார். 40 எம்எல்ஏக்களுடன் பாஜக கூட்டணி அரசில் இணைந்த அவருக்கு துணை முதல்வர் பதவியை பாஜக வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளதால் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவது பாதிக்கப்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டணிகள் முறிவு: மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டணி, பிஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஜக்கிய ஜனதா தளத்துடன் நீண்ட ஆண்டுகளாக கூட்டணி என்ற ரீதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் பெருவாரியான வெற்றியை 2 மாநிலங்களிலும் பாஜக பெற்றது. இதனால் இரு மாநிலங்களிலும் கடந்த தேர்தலின்போது அதிக எம்.பி.க்களை பாஜகவால் பெற முடிந்தது. ஆனால், தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி, உத்தவ் பிரிவு, ஏக்நாத் ஷிண்டே பிரிவு என 2 ஆக உடைந்துள்ளது. பிஹாரில் நிதிஷ் குமாருடன் கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவை அகற்ற காங்கிரஸ் தலைமையில் சுமார் 19 கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிகள் நடக்கின்றன. இதற்காக அண்மையில் பிஹாரில் நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
தற்போது மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால், தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலில் நிற்பது பெருமளவில் பாதிக்கும் என பாஜக கருதுகிறது. நாட்டின் வர்த்தகத் தலைநகராக விளங்கும் மும்பையிலிருந்துதான் பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நிதி வழங்கப்படும் நிலை இருக்கிறது. எனவே, மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது எழுந்துள்ள அரசியல் மாற்றம், எதிர்க்கட்சிகளின் தேசிய ஒருங்கிணைப்புக்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறது.