சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், சோப்பு, பிஸ்கெட், டீ, காபி, பன், டூத் பேஸ்ட், பிரஷ், தேங்காய் எண்ணெய் மற்றும் பல்வேறு தின்பண்டங்கள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த கேன்டீன்களில் ஒவ்வொரு ‘ஏ’ வகுப்பு கைதிகள் வாரத்துக்கு ரூ.1,000 வரையிலும், ‘பி’வகுப்பு கைதிகள் ரூ.750 வரையிலும் பொருட்கள் வாங்க அனுமதி உண்டு. ஆனால், சிறை கைதிகளுக்கான கேன்டீனில் கூடுதல் விலைக்கு பொருட்களை விற்று முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் சிறைத் துறை டிஜிபி அமரேஷ் புஜாரி, சிறைகளில் உள்ள கேன்டீன்களைப் புதுப்பித்து, அவற்றில் பயோ-மெட்ரிக் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளார். இதன்மூலம் இனி சிறைக்கைதிகள் வாங்கும் பொருட்கள், அதற்காக அவர்கள் செலவிடும் பணம் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். இதனால் முறைகேடுகள் தடுக்கப்படும்.
இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறை கைதிகள் இனி பயோமெட்ரிக் (கைரேகை ஸ்கேன்/ ஸ்மார்ட் கார்டு) மூலம் மட்டுமே கேன்டீனில் பொருட்களை வாங்க முடியும். சிறை கேன்டீன்களின் அனைத்து பரிவர்த்தனைகளும் சம்பந்தப்பட்ட சிறையின் தணிக்கைக் குழு மற்றும் சிறைத் துறை தலைமையகத்தின் தணிக்கைக் குழுவால் கட்டாயமாக தணிக்கை செய்யப்படும். இவ்வாறு அமரேஷ் புஜாரி தெரிவித்துள்ளார்.