மதுரை: மதுரையில் சிவபெருமானின் வலைவீசி திருவிளையாடல் நடைபெறும் வலைவீசி தெப்பக்குளம் இருந்தது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரால் நிகழ்த்தப்பட்ட அனைத்து திருவிளையாடல்களையும் நினைவுகூரும் வகையில் மண்டகப்படிகள், தெப்பக்குளங்கள் உள்ளன. கோயில் திருவிழாவின்போது உற்சவ சுவாமிகள் மண்டகப்படிகள் மற்றும் தெப்பங்குளங்களில் திருவிளையாடல்களை நிகழ்த்தி பக்தர்களுக்கு காட்சி தருவது இன்று வரை தொடர்கிறது.
வலைவீசித் திருவிளையாடல், தை மாதம் தெப்பத்திருவிழாவின் 8ம் நாளில் நடக்கும். இந்த நிகழ்வு வலைவீசித் தெப்பக்குளத்திலும், காளக்கோயில் வளாகத்திலும் நடக்கும். பழமையான வலைவீசித் தெப்பக்குளமும், அதன் கரையில் அமைந்திருந்த காளக்கோயிலும் தற்போது அழிக்கப்பட்டுள்ளது.
எனவே, பழமையான வலைவீசித் தெப்பக்குளம் மற்றும் காளக்கோயிலை மீட்டு மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும், அவற்றை ஆக்கிரமித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன். பரதசக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை அறக்கட்டளை பெயரில் மாற்றி தனி நபருக்கு விற்பனை செய்துள்ளனர். கோயில் தரப்பை சேர்க்காமல் உரிமையியல் வழக்கில் தங்களுக்கு சாதகமாக உத்தரவு பெற்றுள்ளனர். இது குறித்து அறநிலையத் துறை விசாரணை நடத்தி வருகிறது என்றார்.
இதையடுத்து நிதிபதிகள், அறநிலையத் துறை விசாரணையை தொடரலாம். தெப்பக்குளமும், காளக் கோயில் இருந்ததா? அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஆட்சியர் மற்றும் அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.