வேகக்கட்டுப்பாடு விதிப்பதால் மட்டும் வாகன விபத்துகள் குறைந்துவிடுமா… நிபுணர் சொல்வதென்ன?

சமீபத்தில் சென்னையில் இருசக்கர வாகனங்கள், கார்- வேன் உள்ளிட்ட வாகனங்கள், காலை 7 மணி முதல், இரவு 10:00 மணி வரை 40 கிலோ மீட்டர் வேகத்தில்தான் செல்ல வேண்டும் என்று புதிய விதிமுறைகளை காவல்துறை அறிவித்திருந்தது. இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சாலைகளில் விபத்துகள் ஏற்படாதவாறு இரு சக்கர வாகனங்களைப் பாதுகாப்பாக எப்படி ஓட்டலாம் என்பது குறித்து, ஆட்டோமொபைல் துறை வல்லுநர் பார்கவ்விடம் பேசினோம்…

பார்கவ்

“விபத்துகள் ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்றாக வாகனங்களை ஓட்டும்போது செல்போன் பயன்படுத்துவதைக் குறிப்பிடலாம். பொதுவாக வாகனங்களை இயக்கும்போது கவனத்தைச் சிதறவிடக்கூடாது. அதுபோல் சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தாலும், பள்ளமாக இருந்தாலும் அவையும் விபத்துக்கு வழி வகுக்கின்றன.

வாகனங்களில் வேகக்கட்டுப்பாடு கொண்டு வருவது விபத்துகளைத் தவிர்க்கும் என்பதில் எனக்கு அபிப்ராயம் இல்லை. வாகனங்களைப் பொறுத்தவரை, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். வண்டிகளின் டயரை அடிக்கடி சரி பார்க்க வேண்டும். பிரேக் சரியாக இருக்கிறதா என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றை செய்யத்தவறும் பட்சத்தில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

சென்னை நகரில் சின்னச்சின்ன சந்துகளில் வாகனம் ஓட்டும் பலர், தவறான பாதைகளில் வருகின்றனர். இத்தகைய விதிமீறல்களைத் தவிர்க்க வேண்டும். வண்டியின் வேகத்தை உங்களால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றால் அதுவே சிறப்பு. நகரங்களைப் பொறுத்தவரை, வாகனங்களை இயக்க 40 கிலோ மீட்டர் வேகம் என்பது மிகவும் குறைவு. இந்த வேகத்தில் கண்டிப்பாக நகரங்களில் வண்டியை ஓட்டுவது கடினமானது. ஏனென்றால் இந்த வேகத்தில் இயக்கினால், வண்டியும் திணறும், ஒரு கட்டத்தில் உங்களால் சரிவர ஓட்டிச்செல்லவும் முடியாது.

தற்போது வருகின்ற வாகனங்களில் எவ்வளவு கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் பயனாளிகளுக்குச் சொல்லப்படுகின்றன.

டூ வீலர்

வாகன ஆயில்களை பொறுத்தவரையில் நார்மல் ஆயில், பிரீமியம் ஆயில், சிந்தெடிக் ஆயில் என்று வேறுபடுத்தலாம். ஆயிலின் தன்மையைப் பொறுத்து அதற்கான பராமரிப்பு காலம், அதன் வேகம் எல்லாம் வேறுபடும். அதற்கேற்றாற்போல் வேகத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வாகனங்களில் தேய்மானம் என்பது, ஆயில் குறைபாடு மற்றும் பிரேக்கில்தான் ஏற்படும். வண்டியை நிறுத்த வேண்டிய கட்டாயம் என்றால், பிரேக் மிகவும் அவசியம். அதனை எப்போதும் சரிபார்த்து பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். தவறும்பட்சத்தில் விபத்துகளுக்கு வழிவகுக்கும்.

அதுபோல ஒருசிலர், டயர் டியூப்பில் அதிகமாக காற்றை ஏற்றுவார்கள். அது வெடித்து விபத்துகள் ஏற்பட வாய்ப்பாகிறது. எனவே, டியூப்பில் சரியான அளவு காற்று இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இப்போது வருகிற புதுமாடல் வண்டிகளின் இண்டிகேட்டரில் சத்தம் வருவதில்லை. இண்டிகேட்டர் சத்தமுள்ள வாகனங்களில், அதன் ஒலி வாகனம் ஓட்டுபவருக்கு அலர்ட் செய்வதாக மட்டுமே இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது. பல வாகன ஓட்டிகள், திரும்பும்போது இண்டிகேட்டர் போடுவதில்லை, கையால் சைகைகூட காட்டுவதில்லை என்பதே உண்மை.

வேகம்

என்னைப் பொறுத்தவரை 40 கிலோ மீட்டர் வேகக்கட்டுப்பாடு விதிப்பது மட்டுமே விபத்தை தடுக்காது. இதுபற்றி வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும். அதோடு ஆர்டிஓ மற்றும் போலீசார் இணைந்து செயல்பட வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இப்போதெல்லாம் 10 முதல் 12 சதவிகிதம் பேரே ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குச் சென்று விதிமுறைகளைப் பின்பற்றி, லைசன்ஸ் வாங்குகின்றனர். இந்த விஷயத்தில் ஆர்.டி.ஓ மற்றும் போலீசார் சரிவர நடவடிக்கைகள் எடுத்தாலே விபத்துகள் கண்டிப்பாகக் குறையும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.