Anurag Kashyap: இது லியோ படமா? இல்ல இயக்குநர்கள் மாநாடா? இந்த இயக்குநரும் நடிக்கிறாராம்!

சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளத- தற்போது காஷ்மீரில் பேட்ச் வொர்க் நடைபெற்று வருகிறது.

இதற்காக லியோ டீம் தற்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் முழுமையாக நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் காஷ்மீர் சூட்டிங்கில் மேலும் ஒரு இயக்குநர் இணைந்துள்ளார். இவர் பாலிவுட்டின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்.

லியோ படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்: நடிகர்கள் விஜய், த்ரிஷா 14 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள படம் லியோ. மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ், விஜய்யை இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தில் விஜய்க்காக சில சமரசங்களை செய்துக் கொண்டதாகவும் அது 50 சதவிகிதம் மட்டுமே தன்னுடைய படமாக அமைந்ததாகவும் லோகேஷ் கனகராஜ் முன்னதாக தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 100 சதவிகித லோகேஷ் கனகராஜ் படமாக லியோ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடிகர் விஜய் நடித்து வருகிறார். படத்தின் ஒவ்வொரு ஷெட்யூலிலும் ஏராளமான நடிகர்களை படத்தில் இணைத்து வருகிறார் லோகேஷ். அந்த வகையில் படத்தில் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் என இயக்குநர்களும் ஏராளமான நடிகர்களும் இணைந்துள்ளனர். ஏறக்குறைய யாரைக் கேட்டாலும் லியோ படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக லோகேஷ் -கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான விக்ரம் படத்திலும் ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்தனர். சந்தானபாரதி உள்ளிட்ட பலர் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது லியோ படத்திலும் அதே பாணியை பின்பற்றி வருகிறார் லோகேஷ் கனகராஜ். படத்தில் இருவேறு கெட்டப்புகளில் நடிகர் விஜய் நடித்துள்ளார். அதனால் காஷ்மீர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

லியோ படத்தில் விஜய்யின் போர்ஷன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது சில பேட்ச் வொர்க்குகளுக்காக படக்குழுவினர் தற்போது காஷ்மீருக்கு மீண்டும் சென்றுள்ளனர். இந்நிலையில் காஷ்மீர் சூட்டிங்கில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் அனுராக் காஷ்யாப் இணைந்துள்ளார். காஷ்மீரில் அனுராக் காஷ்யாப் சம்பந்தப்பட்ட காட்சிகளை லோகேஷ் தற்போது படமாக்கி வருகிறார். இன்னும் சில தினங்களே சூட்டிங் உள்ள நிலையில், தற்போதும் படத்தில் அடுத்தடுத்த கேரக்டர்களை சேர்த்து வருகிறார் லோகேஷ்.

முன்னதாக பேட்டியொன்றில் பேசிய அனுராக் காஷ்யப், லோகேஷ் கனகராஜ் படத்தில் தான் நடிக்க விரும்பவில்லை. மாறாக ஒரு காட்சியில் நடித்தாலும் இறந்து போவது போன்ற காட்சியில்தான் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அந்த அளவிற்கு மரணத்தை லோகேஷ் மாஸ் காட்சியாக அமைத்து வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் அவரது விருப்பப்டியே கேரக்டர் அமைந்திருக்குமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படம் இயக்குநர்களின் மாநாடாக மாறியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே படத்தில் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன் என முன்னணி இயக்குநர்கள் உள்ள நிலையில், தற்போது பாலிவுட்டின் பிரபல இயக்குநரும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. சமீபத்தில் தனது பேட்டியொன்றில் பேசிய கௌதம் மேனன், லியோ படத்தில் தான் நடிகராக மட்டுமே இணைந்ததாக தெரிவித்திருந்தார். அதேபோல மற்ற இயக்குநர்களின் தலையீடும் படத்தில் இருக்காது என்றே கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.