வாஷிங்டன்: அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை செயலுக்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் இந்தியாவின் துணை தூதரகம் அமைந்துள்ளது. இந்த தூதரகத்திற்கு கடந்த 2ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளரகள் தீ வைத்துள்ளனர். நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் துணை தூதரகத்தை எரிபொருளை ஊற்றி எரித்துள்ளார். இதையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவைப்பு சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறை செயலுக்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மத்தேயு மில்லர் கூறியிருப்பதாவது:
சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு தீ வைத்த சம்பவத்தை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. வெளிநாட்டு தூதர்களுக்கு எதிரான வன்முறை செயலில் ஈடுபடுவது ஒரு கிரிமினல் குற்றமாகும் எனக் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று கனடாவில் இந்திய தூதருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறவு முறை பாதிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement