26 வயதான ஆப்கானிஸ்தான் இளம் வீரரான உஸ்மான் கனி வங்கதேசத்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் நடைபெற்றுவருகிறது என்ற பரபரப்புக் குற்றசாட்டை முன்வைத்து, கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார் உஸ்மான் கனி.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “சில பரிசீலனைகளுக்குப் பிறகே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.
கிரிக்கெட் வாரியத்தில் நடைபெறும் ஊழல் என்னை இப்படி முடிவெடுக்க வைத்துள்ளது. ஆனால் நான் என் கடின உழைப்பைத் தொடர்வேன். சரியான நிர்வாகம் மற்றும் தேர்வுகுழு அமைக்கப்பட்ட உடன் ஆப்கானிஸ்தானுக்காக மீண்டும் வந்து விளையாடுவேன். அதுவரை என் தேசத்துக்கு ஆதரவு அளிப்பேன். பல முறை தேர்வுக்குழுத் தலைவரைச் சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. இதனால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
உஸ்மான் கனி தன் சர்வதேச கரியரில், ஆப்கானிஸ்தானுக்காக 17 ஒருநாள் மற்றும் 35 டி20 போட்டிகளில் ஆடி, முறையே 435 மற்றும் 786 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல, 20 முதல் தர போட்டிகளில் விளையாடி 1,456 ரன்களை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.