ஒடிசா ரயில் விபத்து: ஒரு மாதமாகியும் உரிமை கோரப்படாத 50 உடல்கள்

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், இன்னும் 50-க்கும் மேற்பட்ட உடல்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன.

கடந்த ஜூன் 2-ம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹாநாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் 293 பேர் உயிரிழந்தனர். மனிதத் தவறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர், இந்திய ரயில்வே அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.

இந்த நிலையில், விபத்து நடந்து ஒரு மாதம் ஆகியும் 50-க்கும் மேற்பட்ட உடல்கள் உரிமை கோரப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பல குடும்பங்கள் தங்கள் உறவுகளின் உடல்களை அடையாளம் காண முடியாமல் தவிப்பதாகவும் தெரிய வருகிறது. அடையாளம் காணப்படாத உடல்கள் அனைத்து புவனேஷ்வர் AIMS – ல் வைக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஷிவ் சரண், ரயில் விபத்தில் உயிரிழந்த தனது அண்ணனின் உடலை அடையாளம் காண முடியாமல் புவனேஸ்வரில் ஒரு மாதம் காலம் தங்கி இருக்கிறார். இதுகுறித்து ஷிவ் சரண் கூறும்போது, “எனது அண்ணனின் ஆடைகள்தான் எனக்கு கிடைத்துள்ளன. ஒரு மாதமாகியும் உடலை அடையாளம் காண முடியவில்லை. இன்னமும் டிஎன்ஏ முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். டிஎன்ஏ முடிவுகள் எப்போது வரும் என்று யாரும் கூற மறுக்கிறார்கள். நான், எனது அண்ணின் உடல் இல்லாமல் செல்ல மாட்டேன். அவருக்கான இறுதி மரியாதையை நிச்சயம் செய்வேன்” என்று கூறினார். ஷிவ் சரணைப் போல் ஏராளமானவர்கள் உடல்களை பெற காத்து கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வாரம் 29 உடல்களின் டிஎன்ஏ முடிவுகள் வெளியிடப்பட்டு உடல்கள் உரியவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிற உடல்களின் முடிவுகளுக்காக காத்து கொண்டிருக்கிறோம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே ஜூன் 2 ஆம் தேதி இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர்.1000-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.