பெங்களூரு: திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்த கணவன், கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை சித்ரவதை செய்துள்ளார். இதனால் வேதனை அடைந்த தனியார் நிறுவன பெண் மேலாளர் விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. அந்த பெண் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
திருமணத்தை மீறிய உறவு பல குடும்பங்களை சிதைத்து விடுகிறது. பலரது வாழ்க்கையில் புயலை வீசி செல்கிறது.. கள்ளக்காதல் எனப்படும் இந்த திருமணத்தை மீறிய உறவால் குழந்தைகள் தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். கணவன், மனைவி இதில் யார் தவறு செய்தாலும், அது மற்றவரை மோசமாக பாதிக்கிறது.
அந்த துரோகத்தை அவர்களால் தாங்கி கொள்ள முடியாமல் விபரீதமான முடிவை எடுக்கிறார்கள். இது தவறான செயல் என்றாலும் அடிக்கடி நடக்கிறது. சமூகத்தில் புற்றுநோய் போல் காணப்படுகிறது. சிகரெட்டி குடித்தால் புற்றுநோய் வரும் என்பதை எப்படி அறிந்து கொண்டே அதனை செய்கிறார்களோ, அதுபோல் தான் சமூகத்தை சீரழிக்கும் என்று தெரிந்தே இந்த கள்ளக்காதலை செய்கிறார்கள்.
பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள ஹெக்கனஹள்ளியை சேர்ந்த பவித்ரா என்ற பெண் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார். ஏற்கனவே திருமணமான இவர், தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். இந்த நிலையில், பவித்ராவுக்கும் அவருடன் வேலை பார்த்து வந்த சேத்தன் கவுடா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பவித்ரா, சேத்தன்கவுடாவை 2-வதாக திருமணம் செய்துகொண்டார்.இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
கள்ளக்காதல்: இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேத்தன் கவுடாவுக்கும், பூஜா கவுடா என்ற பெண்ணுடன் நெருங்கி பழகினார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்தனர். பல இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து சுற்றினார்கள்.
சித்ரவதை: ஒருகட்டத்தில் பவித்ராவிற்கு கணவனின் திருமணத்தை மீறிய உறவு விவகாரம் தெரிந்திருக்கிறது. இதனால் கடும் கோபம் அடைந்த பவித்ரா தனது கணவரையும், பூஜா கவுடாவையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. மேலும் சேத்தன்கவுடா தனது கள்ளக்காதலி பூஜா கவுடாவுடன் சேர்ந்து மனைவி பவித்ராவை அடித்து, உதைத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள்.. கள்ளக்காதல் விவகாரம் தெரிந்ததால் ஆத்திரத்தில் அவர்கள் பவித்ராவை அடிக்கடி அடித்து சித்ரவதை செய்திருக்கிறார்கள்.
வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்: இதனால் மனமுடைந்து காணப்பட்ட பவித்ரா, கடந்த 2-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்வதாக பதிவு செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பவித்ராவின் தாய் பத்மம்மா, அவரது வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது பவித்ரா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து பத்மம்மா கதறி அழுதுள்ளார்.
உருக்கமான கடிதம் சிக்கியது: இதுபற்றி கெங்கேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பவித்ரா கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கடிதத்தில், நான் சேத்தன் கவுடாவை கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி 2-வதாக கல்யாணம் செய்துகொண்டேன். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த எங்கள் இல்லற வாழ்க்கையில் பூஜா கவுடாவால் விரிசல் ஏற்பட்டது. சேத்தன் கவுடாவும், பூஜா கவுடாவும் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த நான், அவர்களை கண்டித்தேன். ஆனால் அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தினர். மேலும் அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர். எனது சாவுக்கு கணவர் சேத்தன் கவுடாவும், பூஜா கவுடாவும் தான் காரணம். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உருக்கமாக கூறி இருந்தார்.
வழக்குப்பதிவு: இதுகுறித்து பவித்ராவின் தாய் பத்மம்மா கெங்கேரி போலீசில் சேத்தன்கவுடா, பூஜா கவுடா மீது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கள்ளக்காதலியுடன் சேர்ந்து சித்ரவதை செய்ததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை தடுப்பு எண்: தற்கொலை என்பது கோழைத்தனம், தற்கொலை மனநிலை வந்தால் உடனே 104 என்ற எண்ணிற்கு அழையுங்கள். அல்லது 9152987821 என்ற எண்ணிற்கு (i call) அழைத்து உங்கள் குறைகளை கூறுங்கள். தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுங்கள்.தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது.